செய்திகள்
லஞ்சம்

சி.பி.ஐ. அதிகாரி அஸ்ரா கார்க்குக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி

Published On 2019-09-14 20:52 GMT   |   Update On 2019-09-14 20:52 GMT
சி.பி.ஐ. வழக்கை தங்களுக்கு சாதகமாக்குவதற்காக ராமச்சந்திர ராவ் தரப்பில் இருந்து அஸ்ரா கார்க்குக்கு ரூ.2 கோடி பேரம் பேசப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சென்னை வானகரத்தில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனத்தின் பெயர் ‘சோமா எண்டர்பிரைசஸ்’. இந்த நிறுவனத்துக்கு எதிராக நிலுவையில் உள்ள சி.பி.ஐ. வழக்கின் விசாரணைகளை தங்களுக்கு சாதகமாக்குவதற்காக நிறுவனத்தின் துணை தலைவர் ராமச்சந்திர ராவ், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் சிலரையும், புரோக்கர்கள் சிலரையும் அடிக்கடி சந்தித்து உள்ளார்.

பின்னர், மத்திய உள்துறை அமைச்சகத்தின் போலீஸ் பிரிவு 1-ல் நியமிக்கப்பட்டுள்ள தீராஜ் சிங் என்பவர் உதவியுடன், சி.பி.ஐ.(ஊழல் தடுப்பு பிரிவு) டி.ஐ.ஜி. அஸ்ரா கார்க்கையும் ராமச்சந்திர ராவ் சந்தித்து உள்ளார்.

இந்த நிலையில், சி.பி.ஐ. வழக்கை தங்களுக்கு சாதகமாக்குவதற்காக ராமச்சந்திர ராவ் தரப்பில் இருந்து அஸ்ரா கார்க்குக்கு ரூ.2 கோடி பேரம் பேசப்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக அஸ்ரா கார்க் தனது மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளார்.

அதைத் தொடர்ந்து அஸ்ரா கார்க் கொடுத்த புகாரின் அடிப்படையில், மூத்த அதிகாரிகளின் திட்டத்தின்படி, உள்துறை அதிகாரி தீராஜ் சிங் மற்றும் புரோக்கர் தினேஷ் சந்த் குப்தா ஆகியோர் அஸ்ரா கார்க் அலுவலகத்துக்கு ரூ.2 கோடி லஞ்ச பணத்தை கொண்டு வந்த போது கையும், களவுமாக பிடிபட்டனர்.

பிடிபட்ட 2 பேரிடமும் இருந்து பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ‘சோமா எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் துணை தலைவர் ராமச்சந்திர ராவ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஸ்ரா கார்க் தமிழக அரசு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு மதுரை, தர்மபுரி மாவட்டங்களின் எஸ்.பி.யாக பணிபுரிந்து நேர்மையான, போலீஸ் அதிகாரி என பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News