செய்திகள்
மகனுடன் சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு, அவரது மகனை வீட்டுக் காவலில் வைத்த போலீஸ்

Published On 2019-09-11 03:49 GMT   |   Update On 2019-09-11 03:49 GMT
ஆந்திராவில் ஆளுங்கட்சிக்கு எதிராக இன்று பேரணி நடைபெறவிருந்த நிலையில், தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் மற்றும் பல்வேறு தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குண்டூர்:

ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாக கூறி, அந்த கட்சிக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி இன்று குண்டூர் மாவட்டத்தில் பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்தது. குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சியினரை ஒய்எஸ்ஆர் காங்கிரசார் தாக்கியதைக் கண்டித்து இந்த பேரணிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த போராட்ட அறிவிப்பால் குண்டூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. முக்கிய பகுதிகளில் போலீசார்  குவிக்கப்பட்டனர்.



மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெலுங்குதேசம் கட்சியின் பல்வேறு தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நர லோகேஷ் ஆகியோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



சந்திரபாபு நாயுடுவின் வீட்டை நோக்கி சென்ற கட்சித் தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

அத்துடன் நரசராவ்பேட்டா, சட்டனபள்ளி, பல்நாடு மற்றும் குராஜாலா உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News