செய்திகள்
காட்டுப்பகுதிக்குள் பிணமாக மீட்கப்பட்ட பல்பீர் கரோல்

ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தால் குடும்பத்தார் வசதியாக வாழ தன்னைத்தானே கொன்ற நபர்

Published On 2019-09-10 14:58 GMT   |   Update On 2019-09-10 14:58 GMT
ராஜஸ்தானில் குடும்பதை காப்பாற்றுவதற்காக ரூ.50 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் எடுத்து கூலிப்படை மூலம் தனது வாழ்க்கையை ஒருவர் முடித்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா மாவட்டத்தில் வசித்து வந்தவர் பல்பீர் கரோல்(38). பல்பீருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இவர் தனது பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு வட்டிக்கு பணம் தந்து சம்பாதிக்கும் தொழில் செய்துவந்தார். இந்நிலையில், கரோல் தனது வீட்டின் அருகே உள்ள காட்டுக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடந்த 2-ம் தேதி பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். 

கொலையான நபரின் செல்போன் அழைப்புகள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் ராஜ்வீர் சிங் மற்றும் சுனில் யாதவ் என்ற இரண்டு நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தபட்ட விசாரணையின் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரேந்திர மஹாவர் கூறுகையில், ’வட்டி தொழில் செய்துவந்த பல்பீர் கரோல் சுமார் 20 லட்சம் ரூபாய்வரை பலருக்கு வட்டிக்கு வழங்கியுள்ளார். ஆனால் அவரிடம் பணத்தை வாங்கிய நபர்கள் யாரும் உரிய முறையில் வட்டி செலுத்தாமலும் குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பி அளிக்காமலும் போனட்தால் கடுமையான நஷ்டம் மற்றும் மன உளைச்சலுக்குள்ளானார். 



பணத்தை இழந்த  பல்பீர் கரோல் தனது குடும்பத்தினர் யாரும் எதிர்காலத்தில் கஷ்டங்களை அனுபவிக்க கூடாது என விரும்பினார். இதற்காக அவர் ஒரு வினோதமான திட்டத்தை தீட்டினார். 

அதன்படி, கடந்த மாதத்தில் தனியார் வங்கி ஒன்றில் தனது பெயரில் 50 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்தார். அதற்கான முதல் தவணை தொகையை செலுத்தினார். மேலும், ஒருவேளை தான் இறந்தால் பாலிசி பணம் அனைத்தும் தனது குடும்பத்தினரை அடைய வேண்டும் என அவர்களது பெயர்களை வாரிசுதாரர் பெயர்களில் சேர்த்தார். 

இதை தொடர்ந்து, ராஜ்வீர் சிங் மற்றும் சுனில் யாதவ் ஆகிய இருவரை ஏற்பாடு செய்து தன்னை கொலை செய்தால் ரூ. 80 ஆயிரம் தருவதாக கூறி உறுதியளித்து அதற்கான முன் தொகையாக ரூ.10 ஆயிரம் பணத்தை பல்பீர் கரோல் வழங்கியுள்ளார். 



இதையடுத்து, திட்டமிட்டபடி கடந்த 2-ம் தேதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுக்குள் தான் ஏற்பாடு செய்த இருவருடன் சென்ற பல்பீர் ஹரோல் தன்னை கொலை செய்து விட்டு தனது பையில் இருக்கும் மீதி பணம் ரூ.70 ஆயிரத்தை எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனால், ராஜ்வீர் சிங் மற்றும் சுனில் யாதவ் ஆகிய இருவரும் பல்பீர் கரோலின் கை, கால்களை கட்டிவிட்டு அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தனர். 

கொல்லப்பட்ட பல்பீர் கரோலின் செல்போன் உரையாடல்கள் மற்றும் சிசிடிவி உதவியுடன் கொலையாளிகளை கைது செய்துள்ளோம்’ என தெரிவித்தார்.  

எதிர்காலத்தில் குடும்பத்தினர் யாரும் கஷ்டங்களை அனுபவிக்க கூடாது என்ற காரணத்துக்காக ஒருவர் தனது சொந்த வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News