செய்திகள்
பாஜகவில் மீண்டும் இணைந்த கல்யாண் சிங்

ஆளுநர் பதவிக்காலம் முடிந்ததும் அரசியல்- பா.ஜ.க.வில் மீண்டும் இணைந்தார் கல்யாண் சிங்

Published On 2019-09-09 10:31 GMT   |   Update On 2019-09-09 10:31 GMT
ஆளுநர் பதவிக்காலம் முடிந்து லக்னோ திரும்பிய கல்யாண் சிங், பாஜகவில் மீண்டும் இணைந்து அரசியலுக்கு வந்துள்ளார்.
லக்னோ:

ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்த கல்யாண் சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அவர் இன்று தனது சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு வந்தார். பின்னர் அவர் மீண்டும் பாஜகவில் இணைந்து தீவிர அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு புதிய உறுப்பினர் அட்டையை மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தியோ சிங் வழங்கி, கட்சிக்கு வரவேற்றார்.

கட்சி அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் சிவ பிரசாத் சுக்லா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், கல்யாண் சிங்கின் மகன் ராஜ்வீர் சிங் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கல்யாண் சிங் போன்ற மூத்த தலைவர்கள் கட்சிக்கு மீண்டும் வருவதன்மூலம், கட்சியின் அடித்தளம் மேலும் வலுவடையும் என மாநில தலைவர் குறிப்பிட்டார்.



முன்னதாக ராஜஸ்தானில் இருந்து லக்னோ வந்து சேர்ந்த கல்யாண் சிங்கிற்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் கட்சியில் மீண்டும் இணைவது தொடர்பாக நகர் முழுவதும் பேனர்களும், கட்அவுட்டுகளும் வைத்திருந்தனர்.

அவரது வருகையானது ராமர் கோவில் இயக்கத்திற்கு மேலும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, கல்யாண் சிங் மாநில முதலமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News