செய்திகள்
மும்பையில் பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ளம்.

மும்பையில் மீண்டும் கனமழை- பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2019-09-04 05:46 GMT   |   Update On 2019-09-04 05:46 GMT
மும்பையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மும்பை:

மும்பையில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கனமழை பெய்தது. இதனால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பின.

கடந்த மாத தொடக்கத்திலும் மும்பையில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பஸ், ரெயில் போக்குவரத்து சேவைகள் கடுமையாக முடங்கியது. அதன்பின்னர் மும்பையில் மழையின் தீவிரம் குறைந்திருந்தது. கடந்த 20 நாட்களாக பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

இந்நிலையில் மும்பையில் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கனமழையால் பல இடங்களில் பஸ் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. கிங்சர்க்கிள் ரெயில் நிலையம், காந்தி மார்க்கெட் உள்ளிட்டவற்றில் மழை வெள்ளம் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகள் பலவற்றிலும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் சாந்தாகுருசில் 13 செ.மீ. மழையும், கொலபாவில் 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

இன்றும் மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கையால் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவசர உதவி தேவைப்பட்டால் 100 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News