செய்திகள்
கோசாலையில் பலியான பசுக்கள்

பசும்புல் தின்ற 100 பசுக்கள் பரிதாப சாவு

Published On 2019-08-10 21:34 GMT   |   Update On 2019-08-10 21:34 GMT
கோட்டூரு தடையபள்ளியில் உள்ள பசு பாதுகாப்பு இல்லத்தில் 100-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் பசுக்கள் திடீரென சுருண்டு விழுந்து இறந்தன.
விஜயவாடா:

ஆந்திர மாநிலம், விஜயவாடா புறநகர் பகுதியான கோட்டூரு தடையபள்ளியில் உள்ள பசு பாதுகாப்பு இல்லத்தில் (கோசாலை) 1000-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் உள்ளன. அவற்றில் 100 பசுக்கள் நேற்று திடீரென சுருண்டு விழுந்து இறந்தன. மேலும் 10 பசுக்கள் உயிருக்கு போராடி வருகின்றன.

இதுபற்றி அந்த இல்லத்தின் நிர்வாகிகள் காவல் துறைக்கும், கால்நடை பராமரிப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, வெள்ளிக்கிழமை அன்று தீவனமாக அளிக்கப்பட்ட பசும்புல்லை தின்று அவை சுருண்டு விழுந்து இறந்ததாக தெரிவித்தனர்.

மேலும் உயிருக்கு போராடி வரும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் கூறும்போது “பசுக்கள் திடீரென்று இறந்ததற்கான சரியான காரணத்தை உடனடியாக கண்டறிய முடியவில்லை. பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு தடய அறிவியல் சோதனைக்கு பின்னர் தான் அது பற்றி தெரியவரும்” என்று தெரிவித்தார்.

அந்த பசுக்களுக்கு வழங்கப்பட்டது விஷ புல்லாக இருக்குமோ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சுற்று வட்டார கிராம மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
Tags:    

Similar News