செய்திகள்
ஜம்முவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள்

144 தடை உத்தரவு வாபஸ்- ஜம்முவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

Published On 2019-08-10 03:17 GMT   |   Update On 2019-08-10 03:17 GMT
ஜம்முவில் 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டு, இயல்பு நிலை திரும்பியதால் இன்று பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன.
ஜம்மு:

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. இணைய-தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டு உள்ளன. ராணுவத்தினரின் பாதுகாப்பு வளையத்தில் ஜம்மு-காஷ்மீர் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 5 நாட்களாக ஜம்முவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. இதையடுத்து அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் நேற்று திரும்ப பெற்றது. ஆனால், இணைய சேவைகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளன.

144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டு, இயல்பு நிலை திரும்பியதால் ஜம்முவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. 

ஜம்முவில் கத்துவா மற்றும் சம்பா மாவட்டங்களில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டதை அடுத்து, நேற்றே இயல்பு நிலை திரும்பியது. வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மக்கள் எந்த அச்சமும் இன்றி வெளியே வந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொழுகைகள் அமைதியான முறையில் நடைபெற்றன.
Tags:    

Similar News