செய்திகள்
கோழிக்கோட்டில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளம்.

கேரளாவில் கனமழை நீடிக்கும்- 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

Published On 2019-08-07 06:53 GMT   |   Update On 2019-08-07 06:53 GMT
அடுத்த 48 மணி நேரத்திற்கு கேரளாவில் கனமழை நீடிக்கும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் 3 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் வழக்கமாக ஜூன் மாதம் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு மழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதோடு, இதுவரை போதுமான அளவு மழையும் பெய்யவில்லை.

இந்த நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கேரளாவிற்கு வருகிற 8-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த 2 நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக கேரளாவின் வட பகுதிகளான கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து நீடிக்கிறது. இதன் காரணமாக வயநாடு பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்ணில் புதைந்து சுல்தான்பத்தேரி பகுதியைச் சேர்ந்த கரீம் என்பவர் பரிதாபமாக இறந்து போனார். அதே பகுதியைச் சேர்ந்த பிரதீஷ் என்பவரின் உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. ஆற்று வெள்ளத்தில் சிக்கி அவர் பலியாகி உள்ளார்.

நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


அடுத்த 48 மணி நேரத்திற்கு கேரளாவில் கனமழை நீடிக்கும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் தங்குவதற்காக நிவாரண முகாம்களும் திறக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News