செய்திகள்
சித்தார்த்தா

சித்தார்த்தாவிற்கு வருமான வரித்துறை அழுத்தம் கொடுத்ததா?- அதிகாரி விளக்கம்

Published On 2019-07-31 02:06 GMT   |   Update On 2019-07-31 02:35 GMT
சித்தார்த்தாவிற்கு வருமான வரித்துறை அழுத்தம் கொடுத்ததாக வெளியான தகவலுக்கு அந்த துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு :

தொழில் அதிபர் சித்தார்த்தா, எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகியுள்ளது. அதில் வருமான வரித்துறை தனக்கு அழுத்தம் கொடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் வருமான வரித்துறையை குறை கூறினர். இதற்கு வருமான வரித்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழில் அதிபர் சித்தார்த்தா எழுதியதாக ஒரு கடிதம் பரவி வருகிறது. அதில் அவருக்கு சொந்தமான ‘காபி டே‘ நிறுவனத்தின் பங்குகளை முடக்கி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தின் உண்மை தன்மை பற்றி எதுவும் தெரியவில்லை. அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்துக்கும், சித்தார்த் வருமான வரித்துறைக்கு வழங்கிய ஆண்டு அறிக்கையில் இடம் பெற்றுள்ள கையெழுத்திற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. அவை ஒன்றுக்கொன்று சரியாக பொருந்தவில்லை.

கர்நாடகத்தில் பிரபலமான ஒரு அரசியல்வாதியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. கிடைத்த தகவலின் அடிப்படையில் சித்தார்த்தா வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது சிங்கப்பூர் குடியுரிமை பெற்றிருக்கும் ஒரு நபரின் விவரங்களும் கிடைத்தன. சோதனையின்போது, சிங்கப்பூர் நபரிடம் ரூ.1.20 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியது. அது சித்தார்த்தா பணம் என்று அந்த நபர் வாக்கு மூலம் அளித்தார்.

சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் கணக்கில் வராத ரூ.480 கோடி வருமானத்தை சித்தார்த்தா ஒப்புக்கொண்டார். அந்த கணக்கில் வராத வருமானத்திற்கு சித்தார்த்தா வரியை செலுத்தவில்லை. அவர் தனிப்பட்ட வழக்கு ஒன்றிற்காக ரூ.35 கோடி மட்டும் செலுத்தினார். மேலும் அவரது காபி டே நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ.14½ கோடி வருமான வரியை செலுத்தவில்லை.



சித்தார்த்தா தனது ‘மைன்ட் ரீ‘ நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக எங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் செய்தித்தாள்கள் மூலம் தெரியவந்தது. இதுபற்றி நாங்கள் உடனே விசாரித்தோம். அந்த நிறுவனத்தில் சித்தார்த்தா நிறுவனத்திற்கு 21 சதவீத பங்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வருமான வரி நலனை பாதுகாக்கும் நோக்கத்தில் ‘மைன்ட் ரீ‘ நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய தடை செய்தோம்.

அதன் பிறகு சித்தார்த்தா, வருமான வரித்துறையில் ஒரு கடிதத்தை வழங்கி, தடை செய்யப்பட்ட ‘மைன்ட் ரீ‘ நிறுவன பங்குகளை விடுவிக்க கோரியும், அதற்கு பதிலாக தனக்கு சொந்தமான வேறு நிறுவனத்தின் பங்குகளை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறினார். சில நிபந்தனைகளுடன் இதற்கு வருமான வரித்துறை ஒப்புதல் வழங்கியது. அந்த பங்குகளை விற்பனை செய்த சித்தார்த்தாவிற்கு சொந்தமான நிறுவனத்திற்கு ரூ.3,200 கோடி கிடைத்தது. இதில் அவரது நிறுவனம் ரூ.3,000 கோடி கடனை அடைத்தது. ரூ.150 கோடிக்கு இதர செலவுகள் செய்யப்பட்டது.

ரூ.46 கோடியை தான் செலுத்த வேண்டிய வருமான வரிக்கு முன்கூட்டியே செலுத்தினார். பின்னர் மீதி வருமான வரியை அவர் செலுத்தவில்லை. அதனால் அவரது நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.400 கோடி சொத்தை முடக்கினோம். இது அவர் சராசரியாக செலுத்த வேண்டிய வரியை விட 40 சதவீதம் குறைவு ஆகும். சித்தார்த்தா நிறுவனத்தின் விஷயத்தில் வருமான வரித்துறை சட்டப்படி தான் செயல்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News