செய்திகள்
டெல்லி ஐகோர்ட்டு

2ஜி மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது - டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு

Published On 2019-07-31 01:04 GMT   |   Update On 2019-07-31 01:04 GMT
முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
புதுடெல்லி:

தி.மு.க. பங்கேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தின.

இந்த வழக்குகள் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்தன. முன்னாள் தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத்தரப்பு தவறிவிட்டதாக கூறி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி தீர்ப்பு கூறினார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. டெல்லி ஐகோர்ட்டில் தனித்தனியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன. இவற்றுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப கடந்த ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன் பிறகு இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இறுதியாக, அக்டோபர் 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இம்மனுக் களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று டெல்லி ஐகோர்ட்டில் தனி நீதிபதி ஏ.கே.சாவ்லா முன்னிலையில் நடைபெற்றது. சி.பி.ஐ. தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் ஆஜரானார்.

சி.பி.ஐ. தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி ஏற்கனவே அறிவித்தபடி வருகிற அக்டோபர் 24-ந் தேதி, மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். அப்போது, அனைத்து தரப்பினரும் விசாரணையில் பங்கேற்பதை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். 
Tags:    

Similar News