செய்திகள்
ஜெகன்மோகன் ரெட்டி

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டின் பாதுகாப்பிற்கு நிதி ஒதுக்கீடு -ஆந்திர அரசு

Published On 2019-07-23 05:32 GMT   |   Update On 2019-07-23 06:56 GMT
ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டு பாதுகாப்பு ஏற்பாட்டிற்கென அம்மாநில அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
அமராவதி:

மக்களவை தேர்தலுடன் நடைப்பெற்ற ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 150க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்றது.

இதேபோல் மக்களவை தேர்தலிலும் மொத்தமுள்ள 25 இடங்களில் 22 இடங்களில் வெற்றிப் பெற்று வாகை சூடியது. இதன் மூலம் பாராளுமன்றத்தில் நான்காவது மிகப்பெரிய  பலம் வாய்ந்த கட்சியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி  உயர்ந்தது.

முதல்வராக பொறுப்பேற்றது முதலே ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். சமீபத்தில், ஆந்திராவைச் சார்ந்த 4.01 லட்சம் இளைஞர்களுக்கு புதியதாக அரசு வேலை உறுதி எனவும்,  காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 முதல் பணி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.



முன்னதாக, ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, அவரது மகன் மற்றும் முன்னாள் மாநில மந்திரியுமான நர லோகேஷ் ஆகியோருக்கு இனி 2+2 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் மட்டுமே பாதுகாப்பு எனவும்,  இசட் பிரிவு பாதுகாப்பு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்தது.

இதனை எதிர்த்து சந்திரபாபு நாயுடு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கென ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஆந்திர அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான அறிவிப்பாணையை ஆந்திர அரசு நேற்று வெளியிட்டது.

ஐதராபாத்தின் பஞ்சரா ஹில்ஸ்சில் உள்ள அவரது வீட்டில் பொருட்களை சோதனை செய்யும் அறை, சிசிடிவி அறை, காவல் நிலைய அதிகாரிகள் அறை, கழிவறைகள் ஆகியன அமைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News