செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

மும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் - வைரல் வீடியோவால் பரபரப்பு

Published On 2019-07-19 06:58 GMT   |   Update On 2019-07-19 07:01 GMT
மும்பை வீதிகளில் பொது மக்கள் நடமாடும் சாலையில் சிங்கம் சாதாரணமாக சுற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.



மகாராஷ்டிரா மாநிலத்தில் வசிக்கும் பிரபல சின்னத்திரை நடிகர் ஒருவர், தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட வீடியோ தற்சமயம் வைரலாகியுள்ளது. அவர் பதிவிட்ட வீடியோவில் பொதுமக்கள் நடமாட்டம் கொண்ட சாலையில் சிங்கம் ஒன்று சாதாரணமாக நடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

இந்த வீடியோ மும்பை சாலையில் எடுக்கப்பட்டதாக சின்னத்திரை நடிகர் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார். சிலர் இந்த வீடியோ மும்பையின் ஆரே சாலையில் எடுக்கப்பட்டதாக கூறி வருகின்றனர். படேல் என்பவர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார்.

இவரது பதிவில், 'மக்கள் அவர்களின் இடத்தை ஆக்கிரமித்தால், அவை உங்களின் இடத்திற்கு வந்து விடும். இன்று அரே சாலையில் இந்த சிங்கம் கம்பீர நடைபோட்டு சென்றது. இதை பார்த்து கவலை கொள்ள வேண்டும்,' என தெரிவித்திருக்கிறார்.



வீடியோவின் உண்மை தன்மையை ஆய்வு செய்ததில், இது மும்பையில் எடுக்கப்பட்டதல்ல என்பது உறுதியாகியிருக்கிறது. இந்த வீடியோ குஜராத் மாநிலத்தின் ஜூனாகர் பகுதியில் எடுக்கப்பட்டதாகும். இங்கு கிர் தேசிய பூங்கா அமைந்திருக்கிறது. இதே வீடியோவினை சில செய்தி சேனல்கள் 2019, ஜூலை 13 ஆம் தேதி வெளியிட்டன.

வீடியோ வெளியானது முதல் இதனை பலர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் சிங்கம் மும்பையில் உலா வருவதாக பகிர்ந்து வருகின்றனர். வீடியோவை உற்று நோக்கினால், கிர் பூங்காவின் சின்னம் இருப்பதை பார்க்க முடியும். 

அந்த வகையில் மும்பை சாலையில் சிங்கம் உலா வருவதாக கூறும் பதிவுகள் அனைத்தும் பொய் என்பது உறுதியாகிறது. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களை நம்பி, அவற்றை பரப்பாதீர்கள். அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க வழிசெய்யும். 

சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவும் போலி செய்திகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது.
Tags:    

Similar News