செய்திகள்
மது பழக்கம்

2050-ம் ஆண்டுக்குள் குடிமகன்கள் பலி எண்ணிக்கை 25 கோடியாக உயரும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published On 2019-07-16 10:01 GMT   |   Update On 2019-07-16 10:01 GMT
2011-ல் இருந்து 2050 வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் மது குடிப்பதால் மொத்தம் 25 கோடியே 80 லட்சம் மக்கள் உயிர் இழப்பார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் மது அருந்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் ஏற்படும் நோய் மற்றும் பல்வேறு காரணங்களால் உயிர் இழப்புகள் அதிகம் ஏற்படுவதுடன் இந்திய பொருளாதாரத்துக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

உலக அளவில் உயர் மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் ஒரு சதவீதம் அளவிலான உள்நாட்டு உற்பத்தி தொகையை மதுவுக்காக செலவிடுகிறது. வளர்ந்து வரும் நாடுகள் 2 சதவீதம் அளவுக்கு செலவிடுகின்றன.

பிரான்சு நாட்டில் 1.7 சதவீதமும், அமெரிக்காவில் 2.7 சதவீதமும், தென்கொரியாவில் 3.3 சதவீதமும், தாய்லாந்தில் 1.99 சதவீதமும் செலவிடுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை மொத்த உள்நாட்டு உற்பத்தி தொகையில் 1.45 சதவீதத்தை செலவிடுகின்றனர்.


மது குடிப்பதால் 3 வகையான வழிகளில் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. ஈரல் பாதிப்பு, புற்று நோய் மற்றும் மது குடிப்பதனால் ஏற்படும் விபத்துகள் போன்றவை இவ்வாறு உயிர் இழப்புகளை ஏற்படுத்துகின்றன.

இந்தியாவில் மதுவினால் சுகாதார பாதிப்பு மற்றும் பொருளாதார பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

சமுதாய மருத்துவ துறை, பொது சுகாதார கல்வி மையம், சண்டிகார் உயர் மருத்துவ கல்வி மையம், தேசிய போதை மருந்து தடுப்பு சிகிச்சை மையம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன.

2011-ம் ஆண்டில் இருந்து இதுவரை மதுவினால் ஏற்பட்டுள்ள உயிர் இழப்பு மற்றும் பொருளாதார பாதிப்புகளை மையமாக வைத்து 2050 வரை எந்த மாதிரி பாதிப்புகள் ஏற்படும் என்பதை கணக்கிட்டு ஆய்வை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

இதன் ஆய்வு முடிவுகள் சர்வதேச பத்திரிகையான ‘டிரக் பாலிசி’ பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

அதில், 2011-ல் இருந்து 2050 வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் மது குடிப்பதால் மொத்தம் 25 கோடியே 80 லட்சம் மக்கள் உயிர் இழப்பார்கள்.

இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.45 சதவீதம் இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, மது பழக்கத்தை தடுப்பதற்கு சரியான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளனர்.

அவ்வாறு மது ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டால் 2050-ம் ஆண்டு வரையில் 55 கோடி பேரை பாதுகாக்கலாம் என்றும் கூறி உள்ளனர்.

தற்போதைய நிலையில் மது காரணமாக 5 கோடியே 70 லட்சம் பேர் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு சிறந்த சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும் இந்த ஆய்வு அறிக்கைகள் கூறி உள்ளது.

மதுவினால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளுக்காக மட்டுமே 2050-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ரூ.90 லட்சத்து 78 ஆயிரம் கோடி செலவிட வேண்டி இருக்கும் என்றும் அந்த புள்ளி விவரம் சொல்கிறது.

மது தொடர்பான சிகிச்சைக்காக மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்து 12 ஆயிரத்து 700 கோடி செலவு செய்ய வேண்டி இருக்கிறது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மது குடிப்பவர்கள் மரணம் அடைவது, நோயினால் பாதிக்கப்படுவது போன்ற காரணங்களால் 2050-ம் ஆண்டு வரை இந்தியாவின் உற்பத்தியில் ரூ.121 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்தியாவில் மது குடிப்பதால் ஏற்படும் ஈரல் நோயால் மரணம் அடைவோரின் சராசரி வயது 47.19 ஆக உள்ளது. அதனால் ஏற்படும் புற்று நோயால் இறப்போர் வயது சராசரி 54.63 ஆக இருக்கிறது. மதுவினால் ஏற்படும் விபத்தில் இறப்போரின் சராசரி வயது 42.38 ஆக உள்ளது.
Tags:    

Similar News