செய்திகள்
அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள்

ஜம்முவில் அமர்நாத் யாத்திரை நிறுத்தம்- காரணம் இதுதான்

Published On 2019-07-13 04:32 GMT   |   Update On 2019-07-13 04:32 GMT
ஜம்முவில் உள்ள பகவதிநகர் அடிவார முகாமில் இருந்து புறப்படும் அமர்நாத் யாத்திரை இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீரில் இன்று தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஜம்மு காஷ்மீர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜம்முவில் இருந்து செல்லும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்முவின் பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து, அமர்நாத் யாத்ரீகர்கள் யாரும் புறப்பட்டுச் செல்லவில்லை.

தியாகிகள் தினத்தையொட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தபிறகே, யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஜம்முவில் உள்ள குகைக்கோவிலில் தோன்றி உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக, பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து இதுவரை 58 ஆயிரத்து 427 பேர் சென்றுள்ளனர்.

காஷ்மீர் டோக்ரா ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடிய அப்துல் காதீர் 1931ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக சிறைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 22 பேர் உயிரிழந்தனர். இதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 13-ம் தேதி காஷ்மீரில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News