செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

இது அந்த விமானமா? வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி

Published On 2019-07-10 06:19 GMT   |   Update On 2019-07-10 06:48 GMT
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விமான கேபின் புகைப்படங்களின் உண்மை பின்னணியை தொடர்ந்து பார்ப்போம்.



சமூக வலைத்தளங்களில் வீடியோ கேபின் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது. வீடியோவில் விமானத்தின் கேபின் சுத்தம் செய்யப்படாமல், மோசமான பராமரிப்பை சுட்டிக்காட்டும் வகையில் இருக்கிறது. வைரல் வீடியோ ஏர் இந்தியா விமானத்தில் எடுக்கப்பட்டது எனவும், அதில் ஹஜ் பயணிகள் பயணிப்பதாகவும் தகவல் பரவுகிறது.

52 நொடிகள் ஓடக்கூடிய வீடியோ ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் வேகமாக பரவுகிறது. வீடியோவில் விமானத்தின் கேபின் பகுதி முழுக்க சுகாதாரமற்ற முறையில் இருப்பது மிகத்தெளிவாக தெரிகிறது.

வீடியோவின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முயன்றதில், இது ஏர் இந்தியா விமானத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த வீடியோ 2016 ஆம் ஆண்டு முதல் பரவி வருகிறது. உண்மையில் இந்த விமானம் சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.



இந்த விமானம் ஜெட்டாவில் இருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. சுகாதாரமற்ற கேபினை தொடர்ந்து விமானத்தின் பயணிகள் பகுதியில் இஸ்லாமியர்கள் அமர்ந்து இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இதை வைத்து, ஹஜ் பயணிகள் செல்லும் ஏர் இந்தியா விமானம் என்ற பொய் தகவல் உண்மையென்ற வாக்கில் பரவ விட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த வீடியோ செப்டம்பர் 6, 2016 ஆம் ஆண்டு லைவ்லீக் மூலம் வெளியானது. இந்த வீடியோ, சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ330 விமானத்தின் பரிதாப நிலை எனும் தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் செய்திகளும் இணையத்தில் பதிவாகி இருக்கின்றன.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பலர் பெருமளவு இழப்பை சந்தித்து இருக்கின்றனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர். சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும்.
Tags:    

Similar News