செய்திகள்
பட்டர் சிக்கன் - பனீர் பட்டர் மசாலா

பனீருக்கு பதிலாக பார்சலில் வந்த சிக்கன்-சொமாட்டோவுக்கு ரூ.55 ஆயிரம் அபராதம்

Published On 2019-07-09 05:12 GMT   |   Update On 2019-07-09 07:28 GMT
புனேவில் புட் ஆர்டர் செய்த நபருக்கு டெலிவரியான பார்சலில் பனீர் பட்டர் மசாலாவுக்கு பதிலாக பட்டர் சிக்கன் வந்துள்ளது. இதற்காக சொமாட்டோ நிறுவனத்துக்கு கோர்ட், ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
புனே:

புனேவில் வசிக்கும் வழக்கறிஞர் சண்முக் தேஷ்முக். இவர் ஆன்லைனில் சொமாட்டோ செயலி மூலம் பனீர் பட்டர் மசாலா உணவை ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்சல் வந்துள்ளது.

இந்த பார்சலை திறந்து பார்த்தபோது பட்டர் சிக்கன் வந்துள்ளது. இரண்டும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்ததால் பனீர்தான் என நினைத்து சாப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர்தான் தெரிந்துள்ளது வந்த பார்சலில் இருந்தது பட்டர் சிக்கன் என்பது. இதையடுத்து சண்முக், புனே நுகர்வோர் நீதிமன்றத்தில் சொமாட்டோ நிறுவனத்தின்மீது வழக்கு தொடர்ந்தார்.



இந்த புகாரில், 'இது முதன்முறை அல்ல, ஏற்கனவே ஆர்டர் செய்த உணவு மாறி  வந்துள்ளது. ஆனால் இம்முறை அசைவம் வந்து விட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்' என சண்முக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கூறிய சொமோட்டோ நிறுவனம், 'எங்கள் நிறுவனத்தின் மீது குற்றம் இல்லை. உணவு வழங்கப்பட்ட ஓட்டல் தான் உணவை மாற்றி தந்துள்ளது' என கூறியது.  

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சேவை குறைப்பாட்டிற்காக சொமாட்டோ நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரமும், மேலும் நுகர்வோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.5 ஆயிரமும் சேர்த்து, 45 நாட்களுக்குள் ரூ.55 ஆயிரத்தினை அபராதமாக சண்முக்கிற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News