செய்திகள்

தேர்தலின்போது இடையூறு-ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மனோஜ் குமாருக்கு 3 மாத சிறைத்தண்டனை

Published On 2019-06-25 09:24 GMT   |   Update On 2019-06-25 09:24 GMT
தேர்தலின்போது இடையூறு செய்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மனோஜ் குமாருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் கடந்த 2013ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மனோஜ் குமார், தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கல்யாண்புரி பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்ற எம்சிடி பள்ளியின் பிரதான வாசலில் போராட்டம் நடைபெற்றதால், வாக்காளர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இந்த தேர்தலில் மனோஜ் குமார் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.



ஆனால், வாக்குச்சாவடி அருகே வாக்காளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தியதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், மனோஜ் குமார் குற்றவாளி என கடந்த 11ம் தேதி நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், மனோஜ் குமாருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அப்போது, மனோஜ் குமாருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன், மேல்முறையீடு செய்ய ஏதுவாக அவருக்கு  உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News