செய்திகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் கதாகாலட்சேபம் நிகழ்ச்சியில் பந்தல் சரிந்து விழுந்த விபத்தில் 14 பேர் பலி

Published On 2019-06-23 12:10 GMT   |   Update On 2019-06-23 12:58 GMT
ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டத்தில் இன்று கதாகாலட்சேபம் நிகழ்ச்சியின்போது பந்தல் சரிந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்துக்குட்பட்ட ஜசோல் கிராமத்தில் உள்ள பள்ளியில் இன்று ராமாயண கதாகாலட்சேபம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கண்டு களித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அமர்வதற்காக இரும்பு உத்திரங்களை கொண்டு மிகப்பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது.

மாலை சுமார் ஐந்து மணியளவில் பந்தலின் ஒருபகுதி திடீரென்று சரிந்து விழுந்தது. இரும்பு உத்திரங்களும் பெயர்ந்து கீழே சாய்ந்தன. இதை கண்ட மக்கள் பீதியில் கூச்சலிட்டவாறு உயிர் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.



ஓடிய அவசரத்தில் ஒருவர்மீது மற்றவர் மோதி நிலைகுலைந்து கீழே விழுந்தனர். இதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படையினர் இந்த விபத்தில் பலியான 14 பேரின் பிரேதங்களை மீட்டனர். 20-க்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Tags:    

Similar News