செய்திகள்

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் தினந்தோறும் யோகாசன வகுப்புகள்

Published On 2019-06-21 11:41 GMT   |   Update On 2019-06-21 11:41 GMT
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். தினந்தோறும் யோகாசன வகுப்புகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகர் நகரில் கடந்த 1920-ம் ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

பின்னர், 1988-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் மத்திய பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் தற்போது டெல்லியில் இயங்கி வருகிறது.

இந்நிலையில், ஐந்தாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி ஜாமியா மில்லியா இஸ்லாமியா  பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.



இந்த நிகழ்ச்சியின்போது பேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியை நஜ்மா அக்தர், உரிய பயிற்சியாளர்களை வைத்து இங்கு பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு தினந்தோறும் யோகாசன வகுப்புகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய மனிதவளம் மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் நஜ்மா அக்தர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News