செய்திகள்

பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு

Published On 2019-06-18 11:00 GMT   |   Update On 2019-06-18 11:00 GMT
பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பை இழந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. 2014-ம் ஆண்டு தேர்தலை விட தற்போது 8 இடங்கள் மட்டுமே கூடுதலாக கிடைத்துள்ளன. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பு இரண்டாவது முறையாக பறிபோய் உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களில் 10 சதவீதம் இடங்கள் அதாவது 55 இடங்களைப் பெற்றால்தான் ஒரு கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். காங்கிரஸ் கட்சிக்கு அந்த இடத்தைப் பெற தற்போது 3 எம்.பி.க்கள் குறைவாக உள்ளனர்.



இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் சிலர் இரண்டாவது நாளாக பாராளுமன்றத்தில் இன்று பதவியேற்று கொண்டனர். ஆங்கிலத்தில் மாநிலவாரியான அகரவரிசைப்படி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நின்று வெற்றிபெற்ற சோனியா காந்தி, மேனகா காந்தி, வருண் காந்தி ஆகியோர் இன்று பதவியேற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவார்கள்.

இதைதொடர்ந்து, பாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவியை ஏற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மறுத்துவிட்டதால் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பெர்ஹாம்பூர் தொகுதி எம்.பி.யான ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   
Tags:    

Similar News