செய்திகள்

வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் தங்கைக்கு திருமணம் நடத்தி வைத்த சக வீரர்கள்

Published On 2019-06-17 13:25 GMT   |   Update On 2019-06-17 13:25 GMT
பயங்கரவாதிகளுடனான மோதலில் மரணம் அடைந்த இந்திய விமான படை வீரரின் தங்கைக்கு சக வீரர்கள் திருமணம் நடத்தி வைத்த சம்பவம் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
பீகார்:

இந்திய ராணுவத்தில் விமான படை பிரிவில் பணியாற்றியவர் ஜோதி பிரகாஷ் நிரலா. இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 2017 ஆண்டு நவம்பர் 18ந்தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா பகுதியில் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளில் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கி சண்டையின் போது ஜோதி பிரகாஷ் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினார். ஆனால் பயங்கரவாதிகளின் பதில் தாக்குதலின்போது ஜோதி பிரகாஷ் நிரலா வீரமரணம் அடைந்தார். 

வீர மரணம் அடைந்த ஜோதி பிரகாஷ் நிரலாக்கு சுஷ்மா என்ற மனைவி உள்ளார். மேலும் ஜோதி பிரகாஷ் நிரலாவிற்கு மொத்தம் மூன்று சகோதரிகள் உள்ளனர். அவர்களில் இரண்டு பேருக்கு திருமணம் முடிந்து விட்டது. ஆனால் மூன்றாவது சகோதரிக்கு திருமணம் நடக்காமல் இருந்தது. 

இந்நிலையில் ஜோதி பிரகாஷ் நிரலாவின் மூன்றாவது சகோதரி சசிகலாவிற்கு அவரது தந்தை தேஜ் நாராயன் சிங் மற்றும் தாயார் மாலதி தேவி இணைந்து திருமண ஏற்பாடுகள் செய்தனர். இதனை தொடர்ந்து திருமண விழாவில் பங்கேற்பதற்காக தனது மகனுடன் இணைந்து பணியாற்றிய சக இந்திய விமான படை வீரர்களுக்கு ஜோதி பிரகாஷின் தந்தை அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், வீர மரணம் அடைந்த இந்திய விமான படை வீரர் பிரகாஷின் தங்கையின் திருமணத்திற்கு சக வீரர்கள் 50 பேர் வந்தனர். மேலும் திருமண விழாவின் போது மணமகளின் அண்ணன் முறை செய்யப்படும் அனைத்து செயல்பாடுகளிலும் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து அனைத்து வீரர்களும் இணைந்து தங்கள் பங்களிப்பாக மொத்தமாக 5 லட்சம் ரூபாயினை திருமண விழாவிற்கு ஆகும் செலவினை ஈடுகட்ட ஜோதி பிரகாஷின் தந்தையிடம் வழங்கினர்.

இந்திய விமான படை வீரர்களின் இத்தகைய செயல் மணமகன் மட்டுமல்லாமல் திருமண விழாவிற்கு வந்திருந்த அனைத்து மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

பயங்கரவாதிகளுடனான மோதலில் போது வீர மரணம் அடைந்த ஜோதி பிரகாஷ் நிரலாக்கு 2018 ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் போது இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான அசோக் சக்ரா விருது வழங்கி குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News