செய்திகள்

டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவச பயணத்துக்கு அனுமதி வழங்க கூடாது - மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்

Published On 2019-06-15 04:56 GMT   |   Update On 2019-06-15 04:56 GMT
டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவச பயண திட்டத்துக்கு மெட்ரோ மேன் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார்.

இன்னும் 2½ மாதத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறி உள்ளார். இந்த திட்டத்துக்கு ‘மெட்ரோ மேன்’ என்று அழைக்கப்படும் டெல்லி மெட்ரோ ரெயில் கழகத்தின் முதன்மை ஆலோசகர் ஸ்ரீதரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மெட்ரோ கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த ஸ்ரீதரன் கடந்த 2011-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

டெல்லி மெட்ரோ ரெயில் திட்டத்தில் மத்திய அரசும், டெல்லி அரசும் சம பங்கை செலுத்தி இருக்கின்றன. எனவே இந்த மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று ஒரு பங்குதாரர் மட்டும் முடிவெடுத்து விட முடியாது. இது போன்ற திட்டங்களால் மெட்ரோ ரெயில் கழகமே திவாலாகி விடும் நிலை வரலாம்.



டெல்லி மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதலாவது பிரிவு தொடங்கப்பட்ட போது யாருக்கும் பயண டிக்கெட்டில் சலுகை காட்டக்கூடாது என்று முடிவெடுத்தோம். இதனால் டெல்லி மெட்ரோவின் வருவாய் கூடியது.

எனவே டிக்கெட் கட்டணத்தை குறைக்க முடிந்தது. மேலும் மெட்ரோ திட்டத்துக்காக வாங்கிய கடனை அடைக்க முடிந்தது.

டெல்லி மெட்ரோவில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற திட்டத்தை அமல் செய்தால் அது நாட்டின் மற்ற மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் செயல்படுத்துமாறு கோரிக்கை எழும்.

தற்போது டெல்லி மெட்ரோ ரெயில் கழகத்துக்கு ஆண்டு தோறும் ரூ.1000 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதை டெல்லி அரசுதான் கழகத்துக்கு செலுத்தி வருகிறது.

பெண்களுக்கு இலவச பயணம் என்று மேலும் ஒரு சுமை சேரும்போது டெல்லி அரசு கூடுதல் தொகையை செலுத்த வேண்டியது இருக்கும். இதனால் மெட்ரோ ரெயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை வரலாம்.

எனவே டெல்லி மெட்ரோவில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கடிதத்தில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News