செய்திகள்

35-வது ஆண்டு ராணுவ தாக்குதல் தினம்: பொற்கோவிலில் திடீர் பலத்த பாதுகாப்பு

Published On 2019-06-06 09:19 GMT   |   Update On 2019-06-06 09:19 GMT
பொற்கோவிலில் ராணுவ நடவடிக்கையின் 35-வது ஆண்டு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் பொற்கோவிலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் சீக்கியர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக உள்ளது.

கடந்த 1984-ம் ஆண்டு பொற்கோவிலிலுக்குள் பதுங்கி இருந்த காலிஸ்தான் பயங்கரவாதிகளை அப்புறப்படுத்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ராணுவத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ‘ஆபரேசன் புளூ ஸ்டார்’ என்ற பெயரில் ராணுவம் பொற்கோவிலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

பொற்கோவிலில் ராணுவ நடவடிக்கையின் 35-வது ஆண்டு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் பொற்கோவிலில் திடீரென்று போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு போலீசார் மற்றும் சிறப்புபடை பிரிவினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதேபோல் அமிர்தசரஸ் நகர் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமிர்தசரஸ் பகுதியில் கூர்மையான ஆயுதங்கள் உள்பட எந்த விதமான ஆயுதங்களையும் கொண்டு செல்ல 5 நாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

இதற்கிடையே பொற்கோவிலுக்குள் இன்று சிலர் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக கோ‌ஷங்களை எழுப்பினர். இந்தியாவுக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

பொற்கோவிலில் எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையால் இந்திரா காந்தியை அவரது சீக்கிய பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News