செய்திகள்

அசாமில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி- ஊரடங்கு உத்தரவு அமல்

Published On 2019-05-11 03:44 GMT   |   Update On 2019-05-11 03:44 GMT
அசாம் மாநிலம், ஹைலகண்டி நகரில் நேற்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 14 பேர் படுகாயமடைந்தனர்.
கவுகாத்தி:

அசாம் மாநிலம், ஹைலகண்டி நகரில் நேற்று இரு பிரிவினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். ஏராளமான வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.  மோதலில் 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த மோதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. துணை ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் பிரிவு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை இரவு 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

இதுதொடர்பாக ஹைலகண்டி காவல்துறை துணை ஆணையர் கீர்த்தி ஜல்லி கூறுகையில், “இரு வேறு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வன்முறை வெடித்ததால், பாதுகாப்புக்காக ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.



காளி பாரி பகுதியில் நேற்று பிற்பகல் பள்ளிவாசலுக்கு முன்பு ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் சாலையில் அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் வன்முறையாக மாறி, கலவரமாக வெடித்தது. இதன்காரணமாக, மாவட்டம் முழுவதும் மாலை 6 மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.  

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் யாரையும் கைது செய்யவில்லை. மோதல் தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் சர்பானந்த சோனோவால் உத்தரவிட்டுள்ளார்.  பொதுமக்கள் அமைதியாகவும் இணக்கத்துடனும் இருக்க வேண்டும் என்றும், அமைதியை சீர்குலைக்கும் பிரிவினை சக்திகளை அனுமதிக்க கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மாநில நலன்களுக்கும் மக்கள் நலன்களுக்கும் எதிராக செயல்படும் சக்திகள் மீடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எச்சரித்துள்ளார்.
Tags:    

Similar News