செய்திகள்

திருப்பதி கோவிலில் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு உணவளிக்கலாம் - தேவஸ்தானம் தகவல்

Published On 2019-05-08 03:56 GMT   |   Update On 2019-05-08 03:56 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு 3 வேளை உணவளிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. #TirupatiDevasthanam
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தினமும் 3 வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. அந்த திட்டத்துக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் காணிக்கைகளை வாரி வழங்கி வருகின்றனர்.

சாதாரண நாட்களில் 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் பக்தர்களுக்கும், விழா நாட்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது. அன்னதானத்துக்கு தினமும் 14-ல் இருந்து 16½ டன் அரிசி, 6½-ல் இருந்து 7½ டன் காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு முன்பு ஒருநாளைக்கு அன்னதானத்துக்கு ரூ.26 லட்சம் செலவாகியது. தற்போது விலைவாசி உயர்வால் ஒருநாளைக்கு ரூ.30 லட்சம் செலவாகிறது என தேவஸ்தான கணக்குத்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.



எனவே திருமலையில் பக்தர்களுக்கு ஒருநாளைக்கு இலவசமாக அன்னதானம் செய்ய ரூ.26 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவோர் ரூ.30 லட்சத்தை காணிக்கையாக செலுத்த வேண்டும். அவர்களின் பெயரில் பக்தர்களுக்கு 3 வேளை இலவசமாக உணவு வழங்கப்படும். ஒருநாளைக்கு செலவாகும் தொகையை செலுத்த முடியாதவர்கள் 3 வேளையில் ஏதேனும் ஒரு வேளை உணவை மட்டும் பக்தர்களுக்கு அளிக்கலாம்.

அதில் காலை ஒரு வேளை மட்டும் உணவளிக்க ரூ.7 லட்சத்தை காணிக்கையாக செலுத்தலாம். மதியம் ஒரு வேளை மட்டும் உணவளிக்க ரூ.11½ லட்சத்தை காணிக்கையாக செலுத்த வேண்டும். இரவு ஒரு வேளை மட்டும் உணவளிக்க ரூ.11½ லட்சத்தை காணிக்கையாக செலுத்தலாம். ஒருநாளைக்கு பக்தர்களுக்கு உணவளிக்க ரூ.30 லட்சத்தை காணிக்கையாக செலுத்தும் திட்டம் இந்த மாதம் (மே) 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.

ஸ்ரீவெங்கடேஸ்வரா நித்ய அன்னதானத்திட்ட அறக்கட்டளைக்கு இதுவரை 4 லட்சத்து 76 ஆயிரம் பேர் காணிக்கை வழங்கி உள்ளனர். அதன் மூலம் இதுவரை ரூ.1,071 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. அந்த காணிக்கை தொகை, அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் வட்டி தொகையில் இருந்து தான் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #TirupatiDevasthanam
Tags:    

Similar News