செய்திகள்

மோடி மீண்டும் பிரதமரானால் இனிமேல் தேர்தலே நடக்காது - ராஜஸ்தான் முதல்-மந்திரி கணிப்பு

Published On 2019-03-20 01:14 GMT   |   Update On 2019-03-20 01:14 GMT
மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியாவில் இனிமேல் தேர்தலே நடக்காது, சீனா, ரஷியா வழியில்தான் இந்தியா செயல்படும் என்று ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி கூறினார். #AshokGehlot #Modi
புதுடெல்லி:

ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி தலைமையில் நாடும், ஜனநாயகமும் ஆபத்தில் உள்ளன. ஆட்சியை கைப்பற்றுவதற்காக, அவர் எதையும் செய்வார். பாகிஸ்தானுடன் போருக்கும் செல்வார் என்று மக்கள் கருதுகிறார்கள்.

மோடி நல்ல நடிகர். அவர் பாலிவுட்டில் நுழைந்திருந்தால், தனது முத்திரையை பதித்து இருப்பார். பொய் வாக்குறுதிகளை வணிகம் செய்வதில் மோடி கில்லாடி.

மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியாவில் இனிமேல் தேர்தல் நடக்குமா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. சீனா, ரஷியா ஆகியவற்றின் வழியில்தான் இந்தியா செயல்படும்.

அந்த நாடுகளின் பாணியில் தேர்தல் நடத்தப்படும். ஒரே கட்சிதான் ஆளும். யார் அதிபர், யார் பிரதமர் என்பது தேர்தலுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டுவிடும்.

பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போதெல்லாம் அங்குள்ள வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் ஓட்டுகளை கவருவதற்காக, இந்திய தூதரகங்களை துஷ்பிரயோகம் செய்கிறார். அவருக்கு ஆதரவு திரட்டுவதற்கான சந்திப்புகளை இந்திய தூதரகங்கள் நடத்துகின்றன.

ஜனநாயகத்தில் சகிப்புத்தன்மை வேண்டும். பா.ஜனதா தலைவர்களுக்கு சகிப்புத்தன்மையே கிடையாது. எதிர்தரப்பினர் தங்களை கேள்வியே கேட்கக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களின் மரபணுவிலேயே சகிப்புத்தன்மை கிடையாது.

எங்கள் பக்கம்தான் உண்மை இருக்கிறது. எப்போதும் உண்மையே வெல்லும். மக்கள் புத்திசாலிகள் என்பதால், உண்மையையும், பொய்மையையும் வேறுபடுத்தி பார்ப்பார்கள்.

விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, மோடி எதிர்க்கட்சிகளை குறிவைக்கிறார். அவரிடம் சாதனை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டார். அவர் பேசும் வார்த்தைகள், பிரதமர் பதவிக்கு உகந்ததாக இல்லை.

பா.ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக செயல்படுகிறது. ஒவ்வொரு அமைப்பிலும் தனது ஆட்களை திணிக்க முயற்சிக்கிறது.

இவ்வாறு அசோக் கெலாட் கூறினார். 
Tags:    

Similar News