செய்திகள்

இந்திய வீரர்களின் ரத்தத்தால் நீங்கள் தேர்தலில் வெற்றி பெற முடியாது - மம்தா ஆவேசம்

Published On 2019-03-05 16:43 GMT   |   Update On 2019-03-05 16:43 GMT
நாட்டுக்காக சேவை செய்து, ரத்தம் சிந்தி, உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகத்தை வைத்து யாரும் தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்க கூடாது என மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். #MamataBanerjee
கொல்கத்தா:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்கு உள்பட்ட பாலகோட் பகுதிக்குள் புகுந்து அங்குள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது நமது விமானப்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.  

மத்திய அரசுதரப்பில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. ஆனால், மத்திய மந்திரிசபையில் இடம்பெறாத பாஜக தலைவர் அமித் ஷா, அந்த தாக்குதலில் சுமார் 250 கொல்லப்பட்டதாக சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதால் தற்போது இதுதொடர்பான சர்ச்சை தலைதூக்கியுள்ளது. 

இந்நிலையில், நாட்டுக்காக சேவை செய்து, ரத்தம் சிந்தி, உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகத்தை வைத்து யாரும் தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்க கூடாது என மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,  இந்திய வீரர்களின் ரத்தத்தால் நீங்கள் தேர்தலில் வெற்றி பெற முடியாது. இந்திய வீரர்கள் நாட்டுக்காக ரத்தம் சிந்தியுள்ளனர். அவர்கள் இந்தியாவுக்காக பணியாற்றி வருகின்றனர். அவர்களது தியாகங்களை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது. வீரர்கள் இறப்பை அரசியலுக்காக பயன்படுத்துவதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

நாங்கள் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரானவர்கள். மோடி பாஜகவை தனியார் நிறுவனமாக மாற்றி வருகிறார். மோடிக்கு எதிராக யாராவது கருத்து சொன்னால் அவரை பாகிஸ்தான் ஆதரவாளராக சித்தரிக்கப்படுகிறார்.

எனது தந்தை ஒரு தேசபக்தர் என்பதால் எனக்கு யாரிடம் இருந்தும் தேசபக்தியை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார். #MamataBanerjee
Tags:    

Similar News