செய்திகள்

போலி முதலீட்டு திட்டங்களுக்கு தடை - மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

Published On 2019-02-13 09:34 GMT   |   Update On 2019-02-13 09:59 GMT
கவர்ச்சிகரமான போலி முதலீட்டு திட்டங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #LSpassesbill #unregulateddeposit #depositschemes
புதுடெல்லி:

வட மாநிலங்களில் சஹாரா, சாரதா உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்தும் மாதச்சீட்டுகளை நடத்தியும் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவில் மோசடி செய்து முதலீட்டாளர்களை ஏமாற்றி விட்டன.

இதுபோல் மேலும் நடைபெறாமல் இருப்பதற்காக போலி நிதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கவும், நிதி நிறுவனங்களுக்கான சட்டத்திட்டங்களை மிக கடுமையாக்கவும், மோசடி பேர்வழிகளுக்கு அதிகபட்சமான தண்டனை விதிக்கவும், பணம் செலுத்தி ஏமாந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வகை செய்யும் புதிய சட்ட மசோதா 18-7-2018 அன்று பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு பாராளுமன்ற நிதித்துறை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

நிலைக்குழுவின் சில பரிந்துரைகளுக்கு பின்னர் இந்த மசோதா மக்களவையில் இன்று விவாதத்துக்கு பின்னர் நிறைவேறியது.

இந்த விவாதத்தின்மீது பேசிய மத்திய நிதி மந்திரி பியுஷ் கோயல் அரசின் உரிய அங்கீகாரம் பெறாத 978 நிதி வைப்பு திட்டங்கள் கண்டறியப்பட்டதாகவும், இவற்றில் 326 மோசடிகள் மேற்கு வங்காளம் மாநிலத்தில் மட்டும் நடந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.


இதற்கு பதிலளித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பந்த்யோபாத்யாய் இந்த மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், சாரதா போன்ற மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக மத்திய அரசு இதுவரை முறையான விசாரணை நடத்தவில்லை என்று குறிப்பிட்டார். ‘சிட் பன்ட்’ என்ற வார்த்தைக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பின்னர், குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதா நிறைவேறியது. #LSpassesbill #unregulateddeposit #depositschemes
Tags:    

Similar News