செய்திகள்

சித்தூர் அருகே நண்பரை தாக்கி துரத்தி விட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்

Published On 2019-02-05 04:20 GMT   |   Update On 2019-02-05 04:20 GMT
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே நண்பரை தாக்கி துரத்தி விட்டு இளம்பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமலை:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீசிட்டியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைந்துள்ளது. இங்கு இயங்கிவரும் செல்போன் தொழிற்சாலை ஒன்றில் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த செல்வி என்பவரும், (பெயர் மாற்றப்பட்டுள்ளது). காக்கிநாடாவை சேர்ந்த ராஜா என்பவரும் சேலை செய்து வருகின்றனர்.

நண்பர்களான இவர்கள் 2 பேரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு ஸ்ரீசிட்டியில் இருந்து சூலூர்பேட்டை ரெயில் நிலையத்துக்கு சென்றனர். பின்னர் புக்காரா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக அவர்கள் அங்கு காத்திருந்தனர்.

தனியாக இருந்த அவர்களை நோட்டமிட்ட 5 வாலிபர்கள் அங்கு சென்று ராஜாவை தாக்கியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 500 ரூபாயை பறித்து கொண்டு அவரை அடித்து விரட்டினர்.

பின்னர் இளம்பெண் செல்வியை தரதரவென தண்டவாளம் வழியாக இழுத்துச் சென்று ரெயில் நிலையம் அருகே உள்ள முட்புதரில் கிடத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே ரெயில் நிலையம் வழியாக ரோந்து சென்ற போலீசாரிடம் தனக்கும் இளம் பெண்ணுக்கும் நேர்ந்த கொடுமை குறித்து ராஜா கூறினார்.

இதையறிந்த மர்ம கும்பல் செல்வியை வேறு இடத்துக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சூலூர்பேட்டை நெடுஞ்சாலை அருகே நேற்று காலை அதிக ரத்தப்போக்குடன் செல்வி குற்றுயிருராக கிடந்துள்ளார்.

இதைக் கண்ட போலீசார் உடனடியாக பெண் போலீசாரை அங்கு வரவழைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சூலூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து செல்வி புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சூலூர்பேட்டையை சேர்ந்த 5 வாலிபர்கள் குடிபோதையில் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்த டி.எஸ்.பி. பாபு ராஜேந்திரபிரசாத் கூறியதாவது:-

பாதிக்கப்பட்ட செல்வி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் அளித்த புகாரில் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் பற்றிய சில விவரங்களை தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி இது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
Tags:    

Similar News