செய்திகள்

பெங்களூருவில் போர் விமானம் விழுந்து நொறுங்கியது- 2 பைலட்டுகள் பலி

Published On 2019-02-01 09:46 GMT   |   Update On 2019-02-01 09:46 GMT
பெங்களூருவில் இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 2 பைலட்டுகளும் உயிரிழந்தனர். #IAFAircraftCrashes
பெங்களூரு:

பெங்களூருவில் உள்ள எச்ஏஎல் விமான நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. மிராஜ் 2000 போர் விமானத்தில் சித்தார்த் நேகி மற்றும் சமீர் அப்ரால் ஆகிய 2 பைலட்டுகள் வழக்கமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. பின்னர், விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க முற்பட்டனர். ஆனால், அதற்குள் விமானம் தரையில் மோதி தீப்பிடித்தது.

விமானம் தரையை நெருங்கியபோது 2 விமானிகளும் வெளியே குதித்தனர். இதில் பலத்த காயமடைந்த பைலட் சித்தார்த் நேகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பைலட் சமீர் அப்ரால், பலத்த காயமடைந்தார். ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இந்த பைலட்டுகள் இருவரும் போர் விமானத்தை இயக்குவதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #IAFAircraftCrashes

Tags:    

Similar News