செய்திகள்

சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை- மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

Published On 2019-02-01 06:31 GMT   |   Update On 2019-02-01 06:31 GMT
சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #Budget2019 #BudgetSession #PiyushGoyal
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் இன்று இடைக்கால மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:-

1.5 கோடி வீடுகள் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை வரும் மார்ச் மாதத்திற்குள் உருவாகும்.  மலிவு விலையில் எல்இடி பல்புகளை வழங்கியதன் மூலம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு தேவைப்பட்டால் இன்னும் நிதி ஒதுக்கப்படும். நகர்ப்புற வசதிகள் அனைத்தும் கிராமங்களிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்தியிருக்காவிடில் குடும்பங்கள் 35%-40% வரை கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும்.  ஏழை எளிய மக்களுக்கு 143 கோடி எல்இடி பல்புகள் இலவசமாக  வழங்கப்பட்டுள்ளன.



22 விவசாய பொருட்களின் ஆதார விலை 50 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரியானாவில் நாட்டின் 22-வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.

சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் வழங்கப்படும். இந்த பணம் 3 தவணையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.  விவசாயிகளுக்கான உதவித்தொகை வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.75,000 கோடி கூடுதல் செலவாகும்.  நிதி வழங்கப்படுவதன் மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும்.

இவ்வாறு அவர் பேசினார். #Budget2019 #BudgetSession #PiyushGoyal
Tags:    

Similar News