செய்திகள்

திருப்பதி அருகே பள்ளி ஆய்வகத்தில் ஆசிட் பாட்டில்கள் வெடித்து 6 மாணவர்கள் படுகாயம்

Published On 2019-01-29 05:33 GMT   |   Update On 2019-01-29 05:33 GMT
திருப்பதி அருகே செர்லோப்பள்ளியில் ‘ஆசிட்’ பாட்டில்கள் வெடித்துச் சிதறியதில், 6 மாணவர்களின் உடல் வெந்தது. ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #studentsinjured

திருப்பதி:

திருப்பதி புறநகர் மண்டலம் செர்லோப்பள்ளியில் ஜில்லா பரி‌ஷத் உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு, ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பங்கேற்க மாணவர்கள் பலர் வந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் ஆசிரியர்கள் வரவில்லை, அவர்கள் காலதாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஆசிரியர்கள் வர காலதாமதம் ஆனதால் முன்கூட்டியே வந்த மாணவர்கள் சிலர் அறிவியல் ஆய்வகத்தில் ஓடி பிடித்து விளையாடினர். அப்போது மாணவர்களில் 5 பேர் ஆசிட் பாட்டில்கள் மீது விழுந்ததால், வெடித்துச் சிதறியது. 5 மாணவர்களின் இடுப்புக்குக் கீழே ஆசிட் தெறித்து, உடல் வெந்தது. எரிச்சலை தாங்க முடியாமல் அவர்கள் அலறினர்.

மாணவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்ட சக மாணவர்களும், அங்கிருந்த ஒருசில ஆசிரியர்களும் ஓடி வந்து, நடந்த சம்பவத்தைக் கேட்டு விசாரித்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலை கேள்விப்பட்ட பெற்றோரும் பள்ளிக்கு பதறியபடி வந்து, நடந்த விவரங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தனர்.

அங்கு வந்த புதிபட்லா மண்டல பரி‌ஷத் உறுப்பினர் சுதாயாதவ் தன்னுடைய காரில் பாதிக்கப்பட்ட 5 மாணவர்களை ஏற்றிச்சென்று திருப்பதியில் உள்ள ருயா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு, மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #studentsinjured

Tags:    

Similar News