செய்திகள்

குற்றவாளியுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு

Published On 2019-01-28 03:52 GMT   |   Update On 2019-01-28 03:52 GMT
உத்தர பிரதேசத்தில் குற்றவாளியை பிடிக்கச் சென்றபோது நடந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்தார். #UPEncounter #Constablekilled
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா நகரில் குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்ட ஷிவாவ்தார் என்பவரை பிடிப்பதற்காக போலீசார் நேற்று இரவு சென்றனர். ஷிவாவ்தார் இருந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார்,  அவரை சரண் அடையும்படி கூறினர். ஆனால்,  ஷிவாவ்தார், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளான். இதனையடுத்து போலீசாரும் பதில்  தாக்குதல் நடத்தினர்.

சிறிது நேரம் நீடித்த இந்த சண்டையில் போலீஸ் தரப்பில் கான்ஸ்டபிள் ஹர்ஷ் சவுத்ரி (26)உயிரிழந்தார். போலீசாரின் பதில் தாக்குதலில் ஷிவாவ்தார் பலத்த காயம் அடைந்தான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவன், சிறிது நேரத்தில் உயிரிழந்தான்.

இந்த என்கவுண்டரில் உயிரிழந்த கான்ஸ்டபிள் குடும்பத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த கான்ஸ்டபிளின் மனைவிக்கு ரூ.40 லட்சம் மற்றும் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றதில் இருந்து இதுவரை 3000க்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் நடந்துள்ளன. இதில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 78 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 7 போலீசார் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #UPEncounter  #Constablekilled
Tags:    

Similar News