செய்திகள்

தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல்- 11 மணி வரை 23 சதவீத வாக்குப்பதிவு

Published On 2018-12-07 07:02 GMT   |   Update On 2018-12-07 07:02 GMT
தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி வரை 23 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. #TelanganaElections2018
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், எம்பி-எம்எல்ஏக்கள் மற்றும் பிரபலங்கள் குடும்பத்தினருடன் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டனர்.

துணை முதல்வர் கதியன் ஸ்ரீஹரி வாரங்கல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.  தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்பி கவிதா, நிஜாமாபாத்தின் போதங்கல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.

பாஜக தலைவர் கிஷன் ரெட்டி, காச்சிகுடாவில் ஓட்டு போட்டார். மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி சாஸ்திரிபுரம் மைலார்தேவ்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.


முன்னாள் மத்திய மந்திரியும் நடிகருமான சிரஞ்சீவி, நடிகர் நாகார்ஜூனா, நடிகர் அல்லு அர்ஜூன் ஆகியோர் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டனர்.

தெலுங்கானாவில் மொத்தம் 2.80 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஓட்டுப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் சுமார் 9 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 9.30 மணிக்கு 10.15 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. 11 மணி நிலவரப்படி 23 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியை தக்க வைக்க தீவிர பிரசாரம் மேற்கொண்டது. இதேபோல் காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதிய ஜனதா கூட்டணியும் தீவிர களப்பணியாற்றி உள்ளது.

வாக்குப்பதிவு அமைதியாகவும் நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்வதற்காக மாநில போலீசார், துணை ராணுவம், பிற மாநில போலீஸ் படையினர் என சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 446 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. #TelanganaElections2018
Tags:    

Similar News