செய்திகள்
சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்.

சபரிமலை பிரச்சினை - தொடர்ந்து இன்றும் முடங்கியது கேரள சட்டசபை

Published On 2018-12-03 05:52 GMT   |   Update On 2018-12-03 05:52 GMT
சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதையடுத்து சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். #Sabarimala #KeralaAssembly
திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கேரள சட்டசபை கூட்டம் தற்போது நடந்து வருவதால் சட்டசபை கூட்டத்திலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபரிமலை பிரச்சினையை கிளப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக சபையை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இன்றும் கேரள சட்டசபை கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் சபை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார்.



அப்போது காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து சபை நடுவே சென்று சபரிமலை பிரச்சினை தொடர்பாக மாநில அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள்.

அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பேனருடன் சபாநாயகர் அருகே சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் சபாநாயகரால் எம்.எல்.ஏ.க்களை பார்க்க முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ.க்களை இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஆனாலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோ‌ஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது பேசிய முதல்வர் பினராயி விஜயன் காங்கிரசாருக்கும், பா.ஜனதா கட்சியினருக்கும் ரகசிய கூட்டணி இருப்பதாக குற்றம் சாட்டினார். உடனே எதிர்கட்சி தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ரமேஷ்சென்னிதலா பினராயி விஜயனுக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் தொடர்பு உள்ளது என்று கூறினார்.

இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும், கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்களும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபையில் தொடர்ந்து அமளி நிலவியதால் சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார்.  #Sabarimala #KeralaAssembly



Tags:    

Similar News