செய்திகள்

டுவிட்டரில் அமெரிக்க அதிபரின் மூக்கை அறுத்த இந்திய இளம்பெண்ணுக்கு குவியும் பாராட்டுக்கள்

Published On 2018-11-27 15:12 GMT   |   Update On 2018-11-27 15:26 GMT
புவி வெப்பமயமாதலையும், பருவகாலத்தையும் புரிந்துகொள்ள முடியாத அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூக்கை அறுத்த இந்திய இளம்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. #AsthaSarmah #Trump
கவுகாத்தி:

அமெரிக்காவின் பல பகுதிகளில் அதிபயங்கரமான பனிப்பொழிவு நீடித்து வருகிறது. அங்கு தற்போது குளிர்காலம் என்பதால் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. சில இடங்களில் பனிப்புயலும் வீசியுள்ளது.

குறிப்பாக, மத்திய அமெரிக்காவில் கடும் பனிப்புயலும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பனி சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியவில்லை. முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
 
பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் 1600க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

தலைநகர் வாஷிங்டனில் அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டு, கடந்த 21-ம் தேதி நிலவரப்படி அங்கு மைனஸ் 2 டிகிரி என்ற அளவில் கடுமையான குளிர் வாட்டி வதைத்தது.

இந்த குளிர் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘புவி வெப்பமயமாதலில் என்னதான் நடந்தது? முந்தைய வரலாறுகளை எல்லாம் முறியடிக்கும் வகையில் கொடூரமான பனிப்பொழிவு நீடித்து வருகிறது’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அசாம் மாநிலம், ஜோர்ஹாத் நகரை சேர்ந்த அஸ்தா சர்மாஹ் என்னும் 18 வயது இளம்பெண் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியான இந்தப் பதிவை சகட்டுமேனிக்கு போட்டுத்தாக்கியுள்ளார்.

‘உங்களைவிட நான் 54 வயது இளையவள். சுமாரான மதிப்பெண்களுடன் தற்போதுதான் நான் உயர்நிலை கல்வியை முடித்திருக்கிறேன். இருந்தாலும், பருவகாலநிலையும் சீதோஷ்ணநிலையும் ஒன்றல்ல என்பதை நான் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

உங்களுக்கு இது புரிவதற்கு வசதியாக நான் பயன்படுத்திய கலைக்களஞ்சியம் (encyclopedia) நூலை உங்களுக்கு இரவலாக அனுப்பி வைக்கவும் தயாராக இருக்கிறேன். அந்த நூலில் இதுதொடர்பான படங்கள் உள்பட அனைத்து விபரங்களும் அடங்கியுள்ளது’ என அஸ்தா சர்மாஹ் தனது பதில் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கருத்துக்கு அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் உள்ள டுவிட்டர் கணக்குகளில் இருந்து சுமார் 25 ஆயிரம் ’லைக்’ கிடைத்துள்ளன. மேலும், இந்த பதிவு ஐயாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ‘ரிடுவீட்’ செய்துள்ளனர்.



அராபிய கடல் பகுதியில் நிலவும் பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள அஸ்தா சர்மாஹ் விரும்பினால் அவருக்கு தேவையான உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக ஆதரவு கரத்தையும் பலர் நீட்டியுள்ளனர்.

குறிப்பாக, தங்கள் நாட்டு அதிபரின் கத்துக்குட்டித்தனமான பேச்சை இந்த இளம்பெண் சுட்டிக்காட்டியதுடன், சாதுரியமான பதிலால் டிரம்ப்பின் மூக்கை அறுத்ததற்கு அமெரிக்கர்களில் பலர் தங்களது ‘கமென்ட்கள்’ மூலம் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #AssamGirl #Trumptweet #globalwarming #globalwarmingtweet #AsthaSarmah 
Tags:    

Similar News