செய்திகள்

வெளிநாடுகளில் கருப்பு பணம், சொத்துகள் வைத்துள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு எதிராக வருமான வரித்துறை வேட்டை

Published On 2018-10-22 18:39 GMT   |   Update On 2018-10-22 18:39 GMT
வெளிநாடுகளில் சட்டவிரோத சொத்துகள், கருப்பு பணம் வைத்துள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு எதிரான பிரமாண்ட வேட்டையை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது. #IncomeTax #ForeignAsset #BlackMoney
புதுடெல்லி:

வெளிநாடுகளில் எண்ணற்ற இந்தியர்கள் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ளனர். சொத்துகளையும் வாங்கி குவித்துள்ளனர். இதற்கு எதிரான பிரமாண்ட வேட்டையை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது. இதை மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா உறுதிப்படுத்தினார்.

வருமான வரித்துறையின் இந்த கண்காணிப்பு வளையத்துக்குள் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கொண்டுவரப்பட்டு உள்ளனர்.



அவர்கள் வெளிநாடுகளில் வங்கிகளில் போட்டுள்ள பணம், வாங்கிய சொத்துகள் ஆகியவை பற்றி வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது. அந்தந்த நாட்டு வரித்துறையுடன் இணைந்து இந்த விசாரணை நடந்து வருகிறது.

மேலும், மேற்கண்ட இந்தியர்கள், வெளிநாடுகளில் செய்த பண பரிமாற்ற விவரங்களை நிதி புலனாய்வு பிரிவிடம் இருந்து வருமான வரித்துறை பெற்றுள்ளது. அதன் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பண பரிமாற்றம் குறித்து விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இவர்களில் செல்வாக்கான, முக்கிய பிரமுகர்களும் அடங்குவர். அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களும் உள்ளனர்.

வெளிநாடுகளில் கருப்பு பணம், சட்டவிரோத சொத்துகள் வைத்துள்ளவர்களுக்கு எதிராக புதிய கருப்பு பண ஒழிப்பு சட்டம், கடந்த 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி, கருப்பு பணம், சட்டவிரோத சொத்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுவரை ஜெயில் தண்டனையும், 120 சதவீத வரி மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த புதிய சட்டத்தின் கீழ், மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இருப்பினும், தங்களது வெளிநாட்டு பண, சொத்து விவரங்களை வருமான வரி கணக்கு தாக்கலில் தெரிவிக்காதவர்கள் மற்றும் வரிஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் செயல்பட்டவர்கள் மீது மட்டுமே அந்த புதிய சட்டம் பாய்ச்சப்படும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. #IncomeTax #ForeignAsset #BlackMoney 
Tags:    

Similar News