செய்திகள்

சண்டிகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல

Published On 2018-10-17 10:53 GMT   |   Update On 2018-10-17 12:20 GMT
அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் தலைநகராக உள்ள சண்டிகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. #helmet
புதுடெல்லி:

பிறநாடுகளின் காலனி பகுதிகளாக  நமது நாட்டில் உள்ள டெல்லி, கோவா, புதுச்சேரி, அந்தமான் - நிக்கோபர் தீவுகள் மற்றும் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் தலைநகராக உள்ள சண்டிகர் நகரம் உள்ளிட்ட பகுதிகள் யூனியன் பிரதேசம் என்றழைக்கப்படுகின்றன.

மத்திய அரசின் நேரடி ஆளுமைக்கு உட்பட்ட இப்பகுதிகளுக்கென சில சிறப்பு அதிகாரங்களும், சட்டங்களும், சலுகைகளும் உள்ளன. அவ்வகையில், டெல்லிக்குட்பட்ட பகுதிகளுக்கான மோட்டார் வாகன சட்டத்தில் கடந்த 1999-ம் ஆண்டில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் பெண்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயமல்ல, விருப்பப்பட்டால் பாதுகாப்பு கருதி அவர்களின் தேர்வுக்கேற்ப ஹெல்மெட் அணிந்து செல்லலாம் என 1993-ம் ஆண்டில் இயற்றப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் துணை விதி 115-ல் திருத்தம் செய்யப்பட்டது.

பின்னர்,கடந்த 28-8-2014 அன்று இதே விதியில் மீண்டும் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. ‘பெண்கள்’ என்று இருந்த சொல் ‘சீக்கிய பெண்கள்’ என்று மாற்றப்பட்டு, இந்த திருத்தமும் ஒப்புதல் பெறப்பட்டது.



இதன்படி, நாட்டின் தலைநகரான டெல்லியில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் சீக்கிய பெண்கள் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயமல்ல, பாதுகாப்பு கருதி அவர்களின் தேர்வுக்கேற்ப விருப்பப்பட்டால் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.

இந்நிலையில், யூனியன் பிரதேசம் ஆளுமைக்கு உட்பட்ட சண்டிகர் நகருக்கும் இந்த விதி பொருந்தும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் தீர்மானித்தது. இதுதொடர்பான அறிவிப்பு சண்டிகர் நகர நிர்வாகத்துக்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் டெல்லியில் உள்ளதுபோல் இனி சண்டிகர் நகரிலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இருசக்கர வாகனங்களை ஓட்டும், பின்னால் அமர்ந்து செல்லும் சீக்கிய ஆண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல என்னும் நடைமுறை ஏற்கனவே நாடு முழுவதும் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News