செய்திகள்

பிரதமர் மோடி புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் 1,000 நோயாளிகள் பயன் அடைந்தனர்

Published On 2018-09-25 09:56 GMT   |   Update On 2018-09-25 09:56 GMT
பிரதமர் மோடி தொடங்கிய புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் 1,000 நோயாளிகள் பயன் அடைந்தனர். #AyushmanBharat #PMModi

புதுடெல்லி:

பிரதமர் மோடி நேற்று முன்தினம் உலகின் மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழை- எளியவர்கள் பயன் அடையும் வகையில் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ உதவி கிடைக்கும். இதற்கான செலவை மத்திய அரசே ஏற்கும்.

மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்த சற்று நேரத்தில் ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் நகரில் இயங்கும் சிங்பும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 22 வயது கர்ப்பிணி பூனம் மகாதோ குழந்தை பெற்றார். அவருக்கு காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

இதேபோல் ராஞ்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 4 நோயாளிகள் உடனடியாக பயன் அடைந்தனர். மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்த 24 மணி நேரத்தில் 1,000 நோயாளிகள் இதில் சேர்ந்து பயன் அடைந்தனர்.

இந்த திட்டத்தை தேசிய சுகாதாரத்துறை அமைப்பு செயல்படுத்துகிறது. இதில் பயனாளிகள் 98 சதவீதம் பேர் அடையாளம் காணப்பட்டனர். திட்டம் தொடர்பான பிரதமர் மோடியின் கடிதம் அனைவருக்கும் அனுப்பப்படுகிறது.

இதற்கான பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த கடிதத்தை அடையாள அட்டைபோல் பயன்படுத்தி மருத்துவ பயன்களை பெறலாம்.

இதுவரை 40 லட்சம் பேருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு விட்டதாகவும், இந்த கடிதம் ஸ்கேன் செய்யப்பட்டு விட்டதாகவும், இந்த கடிதம் ஸ்கேன் செய்யப்பட்டு அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நேரடியாக சிகிச்சை பெற வழிவகை செய்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #AyushmanBharat #PMModi

Tags:    

Similar News