செய்திகள்

மக்களை சந்திக்கும் நடைபயணம்- ஜெகன்மோகன்ரெட்டி 3000 கி.மீ. நடந்து சாதனை

Published On 2018-09-25 07:33 GMT   |   Update On 2018-09-25 07:33 GMT
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மக்களை சந்திக்கும் நடைபயணம் மூலம் 13 மாவட்டங்களில் 3,000 கி.மீ. செல்ல திட்டமிட்டார். ஆனால் 11 மாவட்டங்களிலேயே அவர் இலக்கை எட்டியுள்ளார். #YSRCongress #JaganmohanReddy
நகரி:

ஆந்திராவில் முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு அரசுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மாநிலம் முழுவதும் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்கும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் கடப்பா மாவட்டம் இடுப்புல பாயா கிராமத்தில் உள்ள தனது தந்தையும், முன்னாள் முதல்- மந்திரியுமான ஒய்.எஸ். ராஜசேகரரெட்டி சமாதியில் இருந்து நடை பயணத்தை தொடங்கினார்.

அப்போது ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் 3,000 கி.மீ. தூரம் பயணம் செய்வேன், மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் செல்வேன் என்று அறிவித்தார். அதன்படி அவர் நாள்தோறும் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.

நேற்று காலை அவர் விஜயநகரம் மாவட்டம் கொத்தவலசா கிராமத்துக்கு நடைபயணம் சென்றார். இங்கு அவர் 3,000 கி.மீ. இலக்கை அடைந்தார். இதையொட்டி அங்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நினைவுத்தூண் திறப்பு விழாவும் பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடந்தது.

இந்த கூட்டத்தில் 1 லட்சம் பேர் திரண்டனர். அவர்கள் மத்தியில் ஜெகன்மோகன் ரெட்டி உணர்ச்சிகரமாக பேசினார். அவர் கூறியதாவது:-

ஆந்திராவில் விவசாயிகள் நாள்தோறும் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவோ ஐ.நா.சபையில் விவசாயிகள் பற்றி பேச சென்று இருக்கிறார். விவசாயிகள் சாவதை பற்றி பேசப் போகிறாரா? என்று தெரியவில்லை.

அமராவதியில் 33,000 ஏக்கர் விவசாய நிலம் தலைநகருக்காக கையகப்படுத்தப்படுகிறது. இந்த நிலம் 3 போகமும் விளையக் கூடியது . அப்படிப்பட்ட நிலத்தை அழித்து சந்திரபாபு தலைநகர் கட்டப்போகிறார். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். விவசாயம் அழிந்து விடும்.

இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.

ஜெகன்மோகன்ரெட்டி 13 மாவட்டங்களில் 3,000 கி.மீ. செல்ல திட்டமிட்டார். ஆனால் 11 மாவட்டங்களிலேயே இலக்கை எட்டியுள்ளார். அவர் நடைபயணம் மேற்கொள்ளும்போது நிகழ்ச்சியில் இடம் பெறாத கிராமத்துக்கும் மக்கள் அழைத்து சென்றதால் இன்னும் 2 மாவட்டங்கள் மீதம் இருக்கும் நிலையில் 3,000 கி.மீ. பயணம் செய்து இருக்கிறார்.

இன்று காலை அவர் மீண்டும் தும்மிகாபாளையம் கிராமத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். மீதம் உள்ள 2 மாவட்டங்களில் அனைத்து கிராமங்களுக்கும் ஜெகன்மோகன்ரெட்டி நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். #YSRCongress #JaganmohanReddy
Tags:    

Similar News