search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்"

    • தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சதலவாடா ஆனந்தபாபு உள்ளிட்ட தொண்டர்கள் காயம் அடைந்தனர்.
    • மோதலில் ஈடுபட்ட இரு கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி-பா.ஜ.க. மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.

    தற்போது ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளன.

    இந்நிலையில் பல்நாடு மாவட்டம், நரச ராவ் பேட்டை தொகுதி தெலுங்கு தேசம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சதல வாடா அரவிந்த் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

    அப்போது 2 கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

    இந்த தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சதலவாடா ஆனந்தபாபு உள்ளிட்ட தொண்டர்கள் காயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 கட்சியினரையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

    மேலும் காயமடைந்தவர்களை மீட்டு நரசராவ் பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மோதலில் ஈடுபட்ட இரு கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அரசியல் கட்சியினர் ஆண் வாக்காளர்களுக்கு மது பாட்டில், சிகரெட் உள்ளிட்டவை அடங்கிய கிப்ட் பாக்ஸ்களை வழங்கி வருகின்றன.
    • பெண் வேட்பாளர்களை கவர்வதற்காக மட்டன் பிரியாணி, இலவச சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆளுங்கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் என தேர்தல் பிரசார வியூகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்து இருந்தார்.

    அரசியல் கட்சியினர் ஆண் வாக்காளர்களுக்கு மது பாட்டில், சிகரெட் உள்ளிட்டவை அடங்கிய கிப்ட் பாக்ஸ்களை வழங்கி வருகின்றன. பெண் வேட்பாளர்களை கவர்வதற்காக மட்டன் பிரியாணி, இலவச சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் வழங்கப்படுவதால் பரிசு பொருட்கள் குவிந்து வருகிறது.

    இந்த நிலையில் பிரகாசம் மாவட்டம், கனிகிரி நகராட்சி மண்டலத்தில் தன்னார்வலராக 500 பேர் வேலை செய்து வருகின்றனர். நேற்று தன்னார்வலர்கள் 500 பேரையும் பொது இடத்திற்கு வரவழைத்தனர்.

    தன்னார்வலர்களுக்கு பரிசு பை ஒன்று வழங்கினர். ஜெகன்மோகன் ரெட்டி உருவபடம் பொறிக்கப்பட்ட அந்த பையில் ரூ.5 ஆயிரம் பணம், ஹாட் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் மற்றும் டின்னர் செட் உள்ளிட்டவை இருந்தன.

    திடீர் அதிர்ஷ்டமாக பணத்துடன் பரிசு பொருட்கள் கிடைத்ததால் தன்னார்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் பையை பெற்றுச் சென்றனர்.

    இதே போல் மற்ற கட்சியினரும் வேட்பாளர்களை வெகுவாக கவரும் வகையில் என்னென்ன பரிசு பொருட்களை வழங்கலாம் என ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆந்திராவில் உள்ள வாக்காளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • கடந்த 3 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் சிறப்பாக செயல்பட்டேன்.
    • எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகி வரும் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நர்சாபுரம் எம்.பி. யாக இருப்பவர் ரகு ராமகிருஷ்ண ராஜி. இவர் தனது எம்.பி. பதிவையே ராஜினாமா செய்து முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் அனுப்பினார்.

    நீங்கள் என்னை பதவி நீக்கம் செய்வதற்காக கஜினி முகமது போன்று பல்வேறு முயற்சிகளை செய்தீர்கள். அந்த முயற்சிகள் எதுவும் உங்களுக்கு பயன் தரவில்லை. என்னை எம்.பி.யாக தேர்ந்தெடுத்த நர்சாபுரம் தொகுதிக்காகவும், தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் போற்றத்தக்க நேர்மையான செயல்களை செய்து இருக்கிறேன்.

    கடந்த 3 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் சிறப்பாக செயல்பட்டேன். இவ்வாறு அவர் தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருந்தார்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.பி.க்கள் முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகி வரும் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.

    ஆந்திர மாநில தேர்தல் பிரசாரத்தில் ஆணுறை (காண்டம்) முக்கியமான கருவியாக மாறி உள்ளது. ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் சட்டசபைக்கும் தேர்தல் சேர்ந்து நடக்க இருக்கிறது.

    அதனால் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்படி வீடு வீடாக செல்லும்போது ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பரிசு தொகுப்பை இரு கட்சிகளும் வழங்குகின்றன.

    அந்த பரிசு தொகுப்பில் ஆணுறை பாக்கெட் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வழங்கும் ஆணுறை பாக்கெட்டில் அந்த கட்சியின் தேர்தல் சின்னமும், தெலுங்கு தேசம் வழங்கும் பாக்கெட்டில் அந்த கட்சியின் தேர்தல் சின்னமும் அச்சிடப்பட்டுள்ளன.


    தேர்தல் பிரசாரத்தில் ஆணுறை வழங்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இந்த விவாகரத்தில் இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.

    ஆனால் இரு கட்சிகளுமே ஆணுறையை வினியோகித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்:-

    ஒரு வீட்டில் அதிக குழந்தைகள் இருந்தால் மானியமாக அதிக தொகையை கொடுக்க வேண்டி இருக்கிறது. அதனை குறைக்க ஆணுறை வழங்குகிறோம் என்றனர்.

    • மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும்.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்க்கு எதிராக தெலுங்குதேசம், ஜனசக்தி கட்சிகள் களம் இறங்கும் நிலையில் கிண்டல்.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், பவன்கல்யாண் ஜனசேனா கட்சியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சட்டசபை தேர்தலில் களம் காண இருக்கின்றன. மக்களவை தேர்தல் உடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

    இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியை எதிர்த்து பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

    நேற்று இரவு அவர் அமராவதி மாவட்டத்தில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தெலுங்கு தேசம் கட்சியின் சின்னம் சைக்கிள். அதை நாம் வீட்டின் நடு அறையில் கொண்டு வைக்க முடியாது. வீட்டுக்கு வெளியில்தான் வைக்க வேண்டும்.

    ஜனசக்தியின் தேர்தல் சின்னம் டீ டம்ளர். பயன்படுத்திய டம்ளர் சமையறையின் சிங்க்-ல் (sink) வைக்க வேண்டும். ஆனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் சின்னம் மின் விசிறி. அது எப்போதும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அதுபோல ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை வீட்டுக்குள்ளே வைத்துக்கொள்ள மக்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்க்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். தெலுங்குதேசம், ஜனசேனாவிற்கு எதிராக வாக்களிப்பார்கள்" என்று கிண்டல் செய்தார்.

    • அம்பதி ராயுடு கடந்த மாதம் 28-ந்தேதிதான் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். கட்சியில் இணைந்தார்.
    • கட்சியில் இணைந்த 10 தினங்களிலேயே அம்பதிராயுடு விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அமராவதி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு. 2019-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெற்றார். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார். கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். சீசனுடன் அவர் ஓய்வுபெற்றார்.

    ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஓய்வு பெற்றவுடனேயே அம்பதிராயுடு ஆந்திர முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போதே அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இணைய உள்ளார் என்று கூறப்பட்டது.

    ஆனால் அவர் கடந்த மாதம் 28-ந்தேதிதான் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். கட்சியில் இணைந்தார்.

    இந்தநிலையில் அம்பதி ராயுடு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகினார். கட்சியில் இணைந்த 10 தினங்களிலேயே அம்பதிராயுடு விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்து விலகவும், அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த நடவடிக்கை குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அம்பதி ராயுடு கூறியுள்ளார்.

    • 39 கார்ப்பரேட் மற்றும் தொழில் நிறுவனங்கள் 363 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளன.
    • பிஆர்எஸ் கட்சி சுமார் 90 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

    2022-23-ல் பா.ஜனதா மட்டும் தேர்தல் நன்கொடையாக 250 கோடி ரூபாய் பெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த காலத்தில் அனைத்து கட்சிகளும் பெற்ற நன்கொடைகளில் பா.ஜனதா மட்டும் 70 சதவீதம் பெற்றுள்ளது.

    39 கார்ப்பரேட் மற்றும் தொழில் நிறுவனங்கள் 363 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளன.

    தெலுங்கானாவின் பிஆர்எஸ் கட்சி மொத்த நன்கொடை தொகையில் 25 சதவீதம் நன்கொடை பெற்றுள்ளது. சுமார் 90 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் 17.40 கோடி ரூபாய் பெற்றுள்ளன.

    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தகவல்.
    • ஜென் மோகன் ரெட்டி அவருக்கு கட்சி துண்டை அணிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-இல் தன்னை இணைத்து கொண்டார்.

    ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, துணை முதலமைச்சர் கே. நாராயணசாமி மற்றும் ராஜம்பேட்ட மக்களவை உறுப்பினர் பி. மிதுன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் அம்பதி ராயுடு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

     


    இது தொடர்பான அறிவிப்பை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கட்சியில் இணைந்த அம்பதி ராயுடுவை வரவேற்கும் விதமாக ஜென் மோகன் ரெட்டி அவருக்கு கட்சி துண்டை அணிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணி மட்டுமின்றி ஐ.பி.எல். தொடரில் அம்பதி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், பல்வேறு மாநிலங்களில் கிரிக்கெட் சங்கங்களிலும் விளையாடி இருக்கிறார்.

    • டொட்டி பாபு ஆனந்த் தெருவில் மேஜை போட்டு அதில் உயிருள்ள பிராய்லர் கறி கோழிகளை வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டார்.
    • பக்கத்திலேயே பெட்டி பெட்டியாக குவாட்டர் மது பாட்டில்களை கொண்ட பெட்டியையும் அடுக்கினார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் விசாகப்பட்டினம் தெற்கு தொகுதி கட்சி நிர்வாகிகள் 'மாற்றி யோசி' என வித்தியாசமாக தசரா பண்டிகை கொண்டாடி உள்ளனர்.

    விசாகப்பட்டினம் தெற்கு தொகுதியை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகரான டொட்டி பாபு ஆனந்த். இவர் தெற்கு மண்டல் பிரிவின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். விசாகப்பட்டினம் தெற்கு தொகுதி வார்டு 31-ல் தசரா பண்டிகையை கொண்டாடினர்.

    அப்போது டொட்டி பாபு ஆனந்த் தெருவில் மேஜை போட்டு அதில் உயிருள்ள பிராய்லர் கறி கோழிகளை வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டார்.

    பக்கத்திலேயே பெட்டி பெட்டியாக குவாட்டர் மது பாட்டில்களை கொண்ட பெட்டியையும் அடுக்கினார். அவர் தெருவில் நின்று கொண்டு போகிற வருகிறவர்களை எல்லாம் கூவி கூவி அழைத்து உயிருள்ள கோழி மற்றும் குவாட்டர் சரக்கை கைகளில் திணித்து தசரா பண்டிகையை கொண்டாட வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இந்த கோழி, மது விவகாரம் ஆந்திரா அரசியலில் விவாதத்துக்குரியதாகி இருக்கிறது.

    • ஆந்திராவில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் ஆர்.கே. செல்வமணி பணியாற்ற தொடங்கியுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் நடிகை ரோஜா முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவர் தற்போது ஆளும் ஒய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார்.

    செம்பருத்தி படத்தில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    மனைவியின் அரசியல் வாழ்க்கைக்கு அவர் உறுதுணையாக இருந்து வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் ஆந்திர அரசியலில் நேரடியாக தலையிடுவது இல்லை.

    இந்த நிலையில் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஆந்திர அரசியலில் நேரடியாக களமிறங்கியுள்ளார்.

    ஆந்திர மாநிலம் நகரியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆர்.கே. செல்வமணி கலந்து கொண்டார்.

    ஆந்திராவில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். மக்களின் மகிழ்ச்சி இப்படியே தொடர வேண்டுமானால் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக வரவேண்டும் என்றார்.

    இதன் மூலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் ஆர்.கே. செல்வமணி பணியாற்ற தொடங்கியுள்ளார். இது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாதயாத்திரை சென்ற சாலைகளில் கற்கள் மற்றும் கட்டைகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷ் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாரா லோகேஷ் யுவகலம் என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரம் மண்டலம், தாடேரு என்ற இடத்தில் லோகேஷ் மற்றும் தொண்டர்கள் நேற்று பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.

    அப்போது பாதயாத்திரை சென்ற சாலைகளில் கற்கள் மற்றும் கட்டைகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. பாதயாத்திரை சென்ற இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் லோகேஷை வரவேற்று பேனர்கள் வைத்திருந்தனர்.

    பேனர்களை அகற்றும் படி போலீசார் தெலுங்கு தேசம் தொண்டர்களிடம் தெரிவித்தனர். இதனால் தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பேனர்களை கிழித்தனர்.

    மேலும் அங்குள்ள கட்டிட மாடிகளில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களது கட்சி கொடியை காண்பித்தபடி பாதயாத்திரையில் கற்கள் மற்றும் கம்புகளை சரமாரியாக வீசி தாக்கினர்.

    இந்த தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமராஜு, தொண்டர்கள் மற்றும் போலீசார் காயம் அடைந்தனர். பாதயாத்திரையில் சென்ற வாகனங்கள் கல்வீசி உடைக்கப்பட்டன.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்தினர்.

    தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்டினர். போலீசார் அனுமதி வழங்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே பாதையாத்திரை சென்றதாகவும் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி பாதயாத்திரையை அப்பகுதியிலேயே நிறுத்தினர்.

    இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் பாதயாத்திரை தொடங்கியது.

    • கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு 2 முறை டி.கே. சிவக்குமாரை ஷர்மிளா சந்தித்துள்ளார்.
    • தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இதற்காக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கர்நாடகாவை போல் தெலுங்கானாவிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறார்.

    இந்த நிலையில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ராஜ சேகர ரெட்டியின் மகளும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஷர்மிளா. ஒய் எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி தலைவராக உள்ளார்.

    இவர் தெலுங்கானாவில் ஆளும் கட்சிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

    மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்று கட்சியை பலப்படுத்தி உள்ளார். ஷர்மிளாவின் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தால் காங்கிரஸ் மேலும் வலுப்பெறும். இதற்காக ஷர்மிளாவிடம் டி.கே. சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு 2 முறை டி.கே. சிவக்குமாரை ஷர்மிளா சந்தித்துள்ளார்.

    இந்த சந்திப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவும் குடும்ப நண்பர் என்பதால் சந்திப்பு நடந்ததாக ஷர்மிளா தெரிவித்தார்.

    இந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. ராமச்சந்திர ராவ் மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தொடர்ந்து ஷர்மிளாவை காங்கிரஸ் கட்சியில் சேரும்படி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைக்க ஷர்மிளா சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    அவ்வாறு இணைக்கப்பட்டால் ஷர்மிளா தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இது தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×