செய்திகள்

தெலுங்கானா சட்டசபை தேர்தல் - ஐதராபாத்தில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் 11-ம் தேதி ஆய்வு

Published On 2018-09-07 15:51 GMT   |   Update On 2018-09-07 16:30 GMT
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுடன் தெலுங்கானா சட்டசபைக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக 11-ம் தேதி ஆய்வு செய்யப்படுகிறது. #TelanganaPolls #ECIteamvisitHyderabad #ECI
ஐதராபாத்:

ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 63 இடங்களில் வெற்றி பெற்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி ஆட்சியமைத்தது. 

அங்கு அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் அம்மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியான சந்திரசேகர் ராவும், அவரது தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சியினரும் சட்டசபையை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்றும் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், சட்டசபையை கலைப்பது என முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவையின் முடிவை ஏற்று, சட்டசபை கலைப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். மேலும், புதிய அரசு அமைவது வரை தற்காலிக முதல்-மந்திரியாக தொடருமாறு சந்திரசேகர் ராவை அவர் கேட்டுக்கொண்டார்.

தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. 

இந்த ஆண்டு இறுதிக்குள் மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுடன் தெலுங்கானா சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து இன்று அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இப்போதே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? தேர்தலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்வதற்காக ஐதராபாத் நகருக்கு துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையிலான அதிகாரிகள் குழுவை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன்  அனுப்பி வைக்கிறது.

வரும் 11-ம்  தேதி (செவ்வாய்க்கிழமை) அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள் இதுதொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் கமிஷனரிடம் சமர்ப்பிப்பார்கள். இதன் அடிப்படையில் 4 மாத தேர்தல்களுடன் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நடத்தப்படலாமா? என்று முடிவு செய்யப்படும்.  #TelanganaPolls #ECIteamvisitHyderabad #ECI
Tags:    

Similar News