செய்திகள்

வெள்ளத்தில் பள்ளி இறுதிச் சான்றிதழ் நாசமானதால் கேரள வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2018-08-20 10:37 GMT   |   Update On 2018-08-20 10:37 GMT
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பள்ளி இறுதிச் சான்றிதழ் நாசமானதால் கோழிக்கோடு மாவட்டத்தில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #KeralaTeen #Teenendslife
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியதால் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர்.

இப்படி தஞ்சம் அடைந்தவர்களில் கோழிக்கோடு மாவட்டம், கரந்தூர் பகுதியை சேர்ந்த வாலிபர் கைலாஷ்(19) என்பவரும் ஒருவர். பன்னிரண்டாம் வகுப்பில்  தேர்ச்சியடைந்த கைலாஷ், ஐ.டி.ஐ. தொழில் பயிற்சியகத்தில் சேர்வதற்கு தேர்வாகி இருந்தார்.

இதற்கான சீருடைகள் தைத்து தனது எதிர்கால வாழ்க்கையை தொடங்கும் கனவில் மிதந்துவந்த கைலாஷ், வெள்ளப்பெருக்கினால் வீட்டை விட்டு வெளியேறி நிவாரண முகாமில் தங்கி இருந்தார்.

ஓரளவுக்கு வெள்ளம் வடிந்ததும், முன்னர் நீரில் மூழ்கியிருந்த தனது வீடு எப்படி இருக்கிறது? என்பதை பார்ப்பதற்காக வந்த கைலாஷ், தனது பள்ளி இறுதிச் சான்றிதழ் தண்ணீரில் நனைந்து நாசமானதை கண்டு மிகுந்த வேதனை அடைந்தார்.

துக்கம் தாங்காமல் வீட்டுக்குள் தூக்கிட்டு பிணமாக தொங்கிய கைலாஷை காணவில்லை என அவரது பெற்றோரும் உறவினர்களும் மிகுந்த கவலை அடைந்தனர்.

இந்நிலையில், நேற்று வீட்டுக்கு வந்த அவர்கள் வீட்டுக்குள் கைலாஷ் பிணமாக தொங்கிய காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பையும் கடந்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #KeralaTeen #Teenendslife 
Tags:    

Similar News