செய்திகள்

கேரள கனமழை - மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் ரூ.1 கோடி நிதியுதவி

Published On 2018-08-19 01:19 GMT   |   Update On 2018-08-19 01:19 GMT
கேரளாவில் கனமழை ஏற்படுத்திய சேதங்களுக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். #AttorneyGeneralVenugopal #KeralaReliefFund
புதுடெல்லி :

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மழை பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளதாக பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், 100 வருடங்களில் இல்லாத இந்த மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்து வருவதாகவும் பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்தநிலையில், வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் கே.எம்.ஜோசப் உள்பட வழக்கறிஞர்கள் பலர் நீதிமன்ற வளாகத்தில் நிவாரண நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ரூ.1 கோடியை கேரள முதல்வர் வெள்ள நிவாரண நிதியில் செலுத்தினார். அவரது மகனான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கிருஷ்னன் வேணுகோபால் ரூ.15 லட்சமும், மற்ற மூத்த வழக்கறிஞர்களான ஜெய்தீப் சிங் மற்றும் சந்தர் உதய் சிங் ஆகியோர் தலா ரூ.5 லட்சமும் நிவாரண நிதியாக அளித்தனர்.

மேலும், உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் சார்பாக அதன் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.30 லட்சம் கேரளாவிற்கு வழங்கப்பட்டது. #AttorneyGeneralVenugopal #KeralaReliefFund
Tags:    

Similar News