செய்திகள்

சாதிக்க வயது தடையில்லை - மூளை பிறழ்ச்சி பாதிப்பு குறித்து நாவல் எழுதிய 16 வயது இந்திய சிறுவன்

Published On 2018-08-12 12:40 GMT   |   Update On 2018-08-12 12:40 GMT
மூளை பிறழ்ச்சியால் பாதிக்கப்படுபவர்கள் அடையும் துன்பம் மற்றும் மரண தருவாயில் அவரகள் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி? என்பது தொடர்பாகவும் 16 வயது சிறுவன் எழுதிய நாவல் பிரபலமாகி வருகிறது. #YashTiwari
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யாஷ் திவாரி என்ற 16 வயது சிறுவன் எல்லைகள் கடந்து சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை தனது ஒற்றை நாவல் மூலம் உலகுக்கு நிரூபித்துள்ளார். மிகவும் புத்திசாலியான யாஷ் திவாரி அதிகமாக புத்தகங்கள் படிப்பதிலும், இண்டர்நெட்டில் அறிவுசார்ந்த விஷயங்களை அறிவதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.

அனைத்திலும் முன்னிலை வகித்த சிறுவனை சி.ஜெ.டி என்ற மூளைப்பிறழ்ச்சி நோய் நாவலாசிரியராக மாற்றியது. இந்த நோய் குறித்து அறிந்த சிறுவன், நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை உணர்ந்தார். இந்த நோய் மிகவும் கொடியது, மேலும், இந்த நோய் தாக்கினால் 6 மாதங்களில் அவர்கள் உயிரிழக்கக்கூடும் என்பதை யாஷ் திவாரி அறிந்து கொண்டார்.



இதையடுத்து, தனது விடுமுறை காலங்களில் இந்த நோய் குறித்த ஒரு நாவலை எழுத துவங்கினார். இல்மா ஜைடி கற்பனை கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்த நாவலில் சி.ஜெ.டி நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்கள் குறித்தும், மரணத்துக்கு முன்பு மீதம் இருக்கும் காலங்களை அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்பது குறித்தும் அந்த நாவலில் யாஷ் திவாரி எழுதியுள்ளார்.

‘அதிர்வலைகளுக்கு இடையில் கொண்டாட்டம்’ என பெயரிடப்பட்ட இந்த நாவல் ஜூன் 29-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இதுவரை 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்கப்பட்டதாகவும், புத்தகம் குறித்த வாசகர்களின் கருத்துக்களும் நல்ல முறையில் வந்துள்ளதாகவும் யாஷ் திவாரியின் தந்தை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். #YashTiwari
Tags:    

Similar News