செய்திகள்

திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள ரூ.2 லட்சம் உதவித்தொகை - பினராயி விஜயன் அறிவிப்பு

Published On 2018-08-05 01:25 GMT   |   Update On 2018-08-05 01:25 GMT
திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள ரூ. 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். #transgenders
திருவனந்தபுரம் :

மனம் புண்படக் கூடிய சொற்களால் ஒரு காலத்தில் அழைக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டவர்கள். இன்று ஒருவித பரிணாம வளர்ச்சிப் பெற்று திருநங்கையர் என மதிக்கப்படுவதுடன், மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கவும் பட்டிருக்கிறார்கள். 

இந்தநிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு ரூ. 2 லட்சத்தை உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பினராயி விஜயனின் அலுவலக பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், சமூக நீதித்துறையின் வழியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கேரள அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள அரசின் இத்தகைய அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உறுப்பு கல்லூரிகளில் அனைத்து பாட பிரிவுகளிலும் திருநங்கைகளுக்காக கூடுதலாக இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளது.  மேலும் பல்வேறு துறையிலும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முதன்மை மாநிலமாக கேரள இடதுசாரி அரசு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News