செய்திகள்

பா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்குவதே காங்கிரசின் லட்சியம் - ப.சிதம்பரம் பேட்டி

Published On 2018-07-28 23:54 GMT   |   Update On 2018-07-28 23:54 GMT
பா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்குவதே காங்கிரஸ் கட்சியின் லட்சியம் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #Chidambaram
பெங்களூரு:

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களையும், கட்சி தொண்டர்களையும் கவரும் விதமாக ‘சக்தி’ என்ற திட்டத்தை நேற்று பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தொடங்கிவைத்தார்.

அதன்பிறகு ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டில் காங்கிரஸ் கட்சியின் பலத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தில் ‘சக்தி’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் சாதாரண தொண்டர்களுடன் எந்த நேரத்திலும் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி தொடர்பு கொண்டு பேச முடியும் என்ற சூழல் ஏற்படும்.

கர்நாடகத்தில் பூத் கமிட்டி மட்டத்தில் காங்கிரஸ் பலவீனமாக இருக்கிறது. அதனால் தான் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. பூத் கமிட்டி மட்டத்தில் இருந்து கட்சிக்கு சக்தி கொடுக்க தான், புதிதாக சக்தி திட்டம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

கர்நாடகம், குஜராத் மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதாவை விட காங்கிரஸ் கூடுதல் ஓட்டுகளை பெற்றது. ஆனால் பா.ஜனதாவை விட காங்கிரஸ் குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றது. கர்நாடகத்தில் பா.ஜனதாவை விட காங்கிரஸ் கட்சி 7 லட்சம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றது. தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சிக்கு 36 சதவீத ஓட்டுகளும், பா.ஜனதாவுக்கு 34 சதவீத ஓட்டுகளும் கிடைத்தது.

அப்படி இருந்தும் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க போவதாக பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகிறார்கள். காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க யாராலும் முடியாது. அது ஒருபோதும் நடக்காது. ஆனால் பா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்குவதே காங்கிரசின் லட்சியம் ஆகும். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை. பா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்குவதை காங்கிரஸ் தொண்டர்கள் சாத்தியமாக்குவார்கள்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.  #Chidambaram #Tamilnews 
Tags:    

Similar News