செய்திகள்

ஆந்திராவில் முழு அடைப்பு - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-07-24 03:17 GMT   |   Update On 2018-07-24 03:17 GMT
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திராவில் இன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #APSpecialStatus #YSRCongressbandh #JaganMohanReddy
விஜயவாடா:

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆளும் தெலுங்குதேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். ஆனால், மத்திய அரசு இந்த விஷயத்தில் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதையடுத்து தெலுங்குதேசம் கட்சி சார்பில் மத்திய அரசு மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் போதிய எம்.பி.க்களின் ஆதரவு இல்லாததால் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

இந்நிலையில், ஆந்திராவுக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும், இந்த விஷயத்தில் மக்களை ஏமாற்றிய கட்சிகளைக் கண்டித்தும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.



விஜயவாடாவில் நேரு பஸ் நிலையத்திற்கு வெளியே ஏராளமான தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்கள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விமர்சனம் செய்தனர். சிறப்பு அந்தஸ்து பெறுவதற்காக முதல்வர் நாயுடு எப்படி பணியாற்றுகிறார்? என்பதை இந்த கைது நடவடிக்கை காட்டுகிறது என்று அவர்கள் கூறினர். பிரகாசம் மாவட்டத்தின் ஓங்கோல் நகரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  #APSpecialStatus  #YSRCongressbandh #JaganMohanReddy
Tags:    

Similar News