செய்திகள்

குப்பை சேகரித்து பிழைப்பு நடத்துபவர் மகன் எய்ம்ஸ் மருத்துவ படிப்புக்கு தேர்வு - ராகுல் வாழ்த்து

Published On 2018-07-22 16:11 GMT   |   Update On 2018-07-22 16:11 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த குப்பை சேகரித்து பிழைப்பு நடத்துபவரின் மகன் எய்ம்ஸ் மருத்துவ படிப்புக்கு தேர்வானதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AIIMS #AsharamChoudhary #RahulGandhi
புதுடெல்லி:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் தேவாஸ் நகரை சேர்ந்தவர் ஆஷாராம் சவுத்ரி (18). இவரது தந்தை தெருவோர குப்பைகளில் இருந்து விலைபோகும் பொருள்களை சேகரித்து விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் மின்சாரமும், கழிப்பறையும் கிடையாது. ஆஷாராம் சவுத்ரி அரசு பள்ளியில் படித்து சக மாணவர்களுடன் போட்டி போட்டு படித்து வந்தார். 

நாடு தழுவிய அளவில் மே 6-ம் தேதி நடைபெற்ற மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் ஆஷாராம் சவுத்ரி 803 வது ரேங்க் பெற்று தேர்ச்சி அடைந்தார்.
 
அதன்பின்னர், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு மே 27-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆஷாராம் தேர்வெழுதினார்.

இந்த நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. மொத்தமுள்ள 707 இடங்களில் 141-வது இடம் பிடித்து முதல் முயற்சியிலேயே ஆஷாராம் தேர்வானார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவமனை நுழைவு தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நரம்பியல் நிபுணர் ஆவதே எனது இலக்கு. எனது சொந்த கிராமத்துக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகளை பெற்று தருவேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

இதற்கிடையே, எய்ம்ஸ் மருத்துவமனை நுழைவு தேர்வில் முதல் முயற்சியில் இடம் பிடித்த ஆஷாராம் சவுத்ரிக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை நுழைவு தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்ற உனக்கு எனது வாழ்த்துக்கள். தேசிய வளர்ச்சியில் உனது பங்களிப்பை நல்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். #AIIMS #AsharamChoudhary #RahulGandhi
Tags:    

Similar News