செய்திகள்

2 ஆண்டுகளில் 5 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர் - மோடி பேச்சு

Published On 2018-07-15 09:29 GMT   |   Update On 2018-07-15 09:29 GMT
சர்வதேச ஆய்வின் புள்ளிவிபரத்தை இன்று மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, கடந்த 2 ஆண்டுகளில் 5 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீண்டுள்ளதாக குறிப்பிட்டார். #5crorepeople #outofpoverty #PM Modi
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம், மிர்ஸாபூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

விவசாயிகளின் பெயரால் அரசியல் நடத்துபவர்களுக்கு தங்களது ஆட்சிக்காலத்தில் விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க நேரமில்லாமல் போனது. ஆனால், எங்கள் ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் குறைந்தபட்ச ஆதரவு விலையை இரண்டரை மடங்கு அதிகமாக்கியுள்ளோம்.

சமீபத்தில் வெளியான ஒரு சர்வதேச ஆய்வு புள்ளி விபரத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே ஆய்வின் முடிவு எங்கள் அரசுக்கு எதிராக வந்திருந்தால் ஊடகங்கள் எங்கள் ஆட்சிய கடுமையாக தாக்கி இருக்கும். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க ஒவ்வொரு நடவடிக்கையாக எடுத்து வருகிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பூர்வாஞ்சல் மற்றும் நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் பல்வேறு திட்டங்களை விரைவுப்படுத்தி, பணிகளை முடித்தோம். அதன் பலனை நாட்டு மக்கள் அனைவரும் இன்று பார்க்கலாம்.

உஜ்வாலா யோஜனா திட்டம் மூலம் விறகுகளை வைத்து அடுப்பெரிக்கும் பெண்களை விடுவித்து, அவர்கள் குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிட முடிகிறது. ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் உத்தரப்பிரதேசத்தில் 5 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் 18 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

3500 கோடி ரூபாய் மதிப்பிட்டில் இன்று தொடங்கப்பட்ட பன்சாகர் பாசன திட்டத்தின் மூலம் மிர்ஸாபூரில் உள்ள ஒன்றரை லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பயனடையும்.

தங்களது ஆட்சிக்காலத்தில் எதுவுமே செய்யாமல் கோப்புகளின் மேல் ஏறி அமர்ந்திருந்தவர்கள் இன்று விவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கிறார்கள். அவர்களது ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் பல்வேறு பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் முடக்கி வைக்கப்பட்டது ஏன்? என மக்கள் கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.  #5crorepeople #outofpoverty #PM Modi
Tags:    

Similar News